திங்கள், 23 ஏப்ரல், 2018

நூதன முறையில் போலீசாரை ஏமாற்றிய சிறுவன்! April 23, 2018

உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைவர் பெயரில் 10-ம் வகுப்பு சிறுவன் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, போலீசாரை ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Image

உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவர், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மூத்த சகோதரர், துபாய் சென்று பணிபுரிய ஏற்பாடு செய்யுமாறு அதே பகுதியை சாதிக் அன்சாரி என்பவரிடம் 45 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார். 

ஆனால், துபாய்க்கு அனுப்பாமல் பணத்தை அன்சாரி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குல்ஹாரியா பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சகோதரரின் வழக்கில் நடவடிக்கை எடுக்க செய்யும் நோக்கில் உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓபி சிங் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவக்கிய சிறுவன், தமது மூத்த சகோதரர் அளித்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரக்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு டிஜிபி உத்தரவிடுவது போன்று பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட மாவட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து 30 ஆயிரம் பணத்தை பெற்று தந்ததுடன், காவல்துறை தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
ஆனால், தாம் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என டிஜிபி கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 10-ம் வகுப்பு சிறுவன் போலி ட்விட்டர் கணக்கை துவங்கி போலீசாருக்கு உத்தரவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.