16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபுவிற்கான தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் மணாய் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஆசாராம் பாபு, தம்மை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த 2013-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆசாராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, ஜோத்பூரில் உள்ள எஸ்.டி., எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோத்பூர் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற நீதிபதி மதுசூதன் சர்மா, ஆசாராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்கள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபணமாகியுள்ளநிலையில், மாலை 3 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறையை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.