ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நிர்மலாதேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்! April 22, 2018

Image

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு சாதகமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்கள் மூலம், இது அம்பலமாகியுள்ளது. 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல, தேவாங்கர் கல்லூரி கணிதப்பேராசிரியை நிர்மலா தேவி முயன்ற விவகாரம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் நியமித்த ஒரு நபர் கமிஷன் விசாரணை ஒரு புறம், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை மறுபுறம் என இவ்வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சாதகமாக செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்கள் மூலம், இது அம்பலமாகியுள்ளது. 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மார்ச் 9-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாணவிகள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியின் விடுமுறையை ரத்து செய்து, மார்ச் 20-ம் தேதி கல்லூரி நிர்வாகம் அவருக்கு கடிதம் அனுப்பியது. 

ஆனால், அவரை புத்தாக்கப் பயிற்சியில் இருந்து, பாதியில் திருப்பி அனுப்ப இயலாது என கூறி, அதே நாளில் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கலைச்செல்வன், தேவாங்கர் கல்லூரிக்கு மறுப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 21 நாள் புத்தாக்கப் பயிற்சியை பாதியில் முடித்து நிர்மலா தேவியை திருப்பி அனுப்ப முடியாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இக்கடிதத்தை நிர்மலா தேவியிடமே பல்கலைக்கழக நிர்வாகம், நேரில் வழங்கியுள்ளது. இந்த கடிதத்துடன் மறுநாள் மார்ச் 21-ம் தேதி, அருப்புக்கோட்டைக்கு வந்து, கல்லூரி நிர்வாகத்திடம் கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் மதுரை திரும்பி புத்தாக்கப் பயிற்சியில் பங்கேற்றுள்ளார் நிர்மலா தேவி. இதன் மூலம், பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது