புதன், 3 பிப்ரவரி, 2021

மறுக்கப்படும் கழிவறை வசதிகள்; சிரமத்திற்கு ஆளாகும் விவசாயிகள்!

 டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வந்த மூன்று முகாம்களிலும் விவசாயிகள் பயன்படுத்தி வந்த கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை பயன்படுத்துவதை சிரமப்படுத்தும் வகையில் டெல்லி காவல்துறை தடுப்புகளை கடந்த சில நாட்களாக நிறுத்தியுள்ளது.

ஜனவரி 26ம் தேதி வன்முறைக்கு பிறகு மூன்று முகாம்களிலும் கூடுதலாக தடுப்புகள் மற்றும் சிமெண்ட் அடுக்குகளை வைத்துள்ளனர் கான்செர்ட்டனா வயர்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திக்ரி மற்றும் காஸிப்பூர் பகுதிகளிலும் மெட்டல் ஸ்பைக்குகளை சாலைகளில் பதித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மிகப்பெரிய போராட்டக்களமாக உருமாறிய சிங்கு எல்லையில், விவசாயிகள் கழிவறைகளை பயன்படுத்தும் வழியில் தடுப்புகளை போட்டுள்ளனர். கழிவறைகளுக்கு அருகே காவல்துறை தற்காலிக சமையலறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.

குர்தாஸ்பூரில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் கூறுகையில், இந்த தடுப்புகள் பலரையும் திறந்த வெளியை பயன்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளது. ஒரு சில கழிவறைகள் மட்டுமே தற்போது இந்த பகுதியில் உள்ளது. பெட்ரோல் பம்ப் பக்கத்தில் ஒரு கழிவறை உள்ளது. நூற்றுக்கணக்கானோர் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். அதனால் அங்கே மிகப்பெரிய வரிசையில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சிங்கு எல்லையில் அமைந்திருந்த போராட்ட முகாமில் தண்ணீர் விநியோகம் ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

டெல்லி நீர்த்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் வெள்ளிக்கிழமை அன்று, டெல்லி காவல்துறை அவரையும் டெல்லி ஜால் வாரிய துணைத்தலைவர் ராகவ் சத்தாவையும், லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் தரக்கூடாது என்று தடுத்ததாக கூறியுள்ளார். செவ்வாய் கிழமை அன்ன்று, சத்தா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, “அவர்கள் ஜால் வாரியத்தின் டேங்கர்களை அனுமதிக்கவில்லை. மேலிடத்தில் இருந்து உத்தரவு என்று மட்டும் அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாங்கள் நீர் விநியோகத்திற்காக முயற்சி செய்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.

அவுட்டர் மாவட்டத்தில் இருந்து சிங்குவில் பணியமர்த்தப்பட்ட மூத்த டெல்லி காவல்துறை அதிகாரி, அத்தியாவசிய சேவைகளை அனுமதிப்பதாக கூறினார். “ஆம், ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி பிரச்சனைக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைக்காக நாங்கள் முக்கிய சாலைகளை முடக்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் மற்ற சாலைகளை பயன்படுத்த முடியும். ஒரு முக்கிய பாதை வழியாக சாலைகள் வழியாக தண்ணீர் டேங்கர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. முன்பு போராட்ட களத்திற்கு வெளியே தான் கழிவறைகள் இருந்தன. தற்போது அவர்களுக்கு அருகே தடுப்புகளுக்கு பக்கமாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

தற்போது பத்திரிக்கையாளர்கள் தடுப்புகளை கடந்து பிரதான சாலை வழியாக உள்ளே செல்ல இயலாது. அவர்கள் வயல்கள் அல்லது உள் சாலைகள் வழியாகவே போராட்ட களத்தை அடைய இயலும்.

ஆனந்தப்பூர் சாஹிபில் இருந்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ரவிந்தர் சிங், அக்கம்பக்கத்தினர் கருணையுடன் நடந்து கொள்வதாகவும், அவர்களின் தொழிற்சாலைகளில் அமைந்திருக்கும் கழிவறைகளை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் கூறினார். சில நேரங்களில் சில கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டிய நிலையும் உள்ளது.

திக்ரியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. திங்கள் கிழமையில் இருந்து சஃபாய் கரம்சாரிகள் இந்த இடத்திற்கு வருவதில்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சிங்கு மற்றும் திக்ரி போராட்ட முகாம்கள் ஹரியானா எல்லைக்குள்ளும், காஸிப்பூர் போராட்ட முகாம் உ.பி. எல்லையிலும் நடைபெறுகிறது.

சஃபாய் கரம்சாரிகள் குடியரசு தினத்திற்கு முன்பு தினமும் வந்து இந்த பகுதிகளை சுத்தம் செய்வார்கள். ஆனால் தற்போது அது ஏதும் நடைபெறவில்லை. நாங்கள் முகாமை சுத்தம் செய்து குப்பைகளை ஓரமாக வைக்கின்றோம். ஆனால் அதனை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பஞ்சாபின் பதிந்தாவில் இருந்து போராட்டத்திற்கு வந்த ரஞ்சித் சிங் கூறியுள்ளார்.

சங்கு போன்றே திக்ரியிலும் கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் கழிப்பறைகளை பூட்டியுள்ளனர். சில கழிப்பறைகளின் தாழ்களை உடைத்து பயன்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இங்கும் சில விவசாயிகள் அருகில் இருக்கும் பெட்ரோல் பம்புகள் அல்லது வழிபாட்டு தளங்களையே நம்பி இருப்பதாக கூறுகின்றனர்.

ஜால் வாரியத்தில் இருந்து நீர் வராத காரணத்தால் விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து டேங்கர்களை வரவழைத்து அருகில் இருக்கும் ஆழ்கிணறுகள் மற்றும் ட்யூப்வெல்களில் இருந்து தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஜஜ்ஜர் மாவட்ட ஆட்சியர் ஜித்தேந்தர் குமாரை தொடர்பு கொள்ள பலமுறை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போதும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. காஸிப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் டெல்லியில் இருந்து போராட்டக்காரர்கள் கலந்து கொள்வதை தடுக்கிறது. 63 வயதாகும் ஜக்மோகன் சௌத்ரி காஸிப்பூரில் போராட்டம் நடத்தி வருகிறார். என்னுடைய உறவினர்கள் டெல்லியில் இருந்து இங்கே போராட்ட களத்தில் பங்கேற்பார்கள். சிலர் சேவைகள் நடத்துவார்கள். ஆனால் தற்போது உள்ளூர்வாசிகள் இந்த தடுப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் என்று எங்களை வெறுத்துவிடுவார்களோ என்ற பயம் உருவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/metal-spikes-on-road-barricades-hit-farmers-access-to-water-toilets-245501/