இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எதிக்கட்சியான திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கு முன்பே உறுதியாகிவிட்டாலும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது பெரிய விவாதமாக அரசியல் களத்தில் தொடர்ந்து வந்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுடனும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், “திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம். சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம். ஐ.யூ.எம்.எல். ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.” என்று கூறினார்.
அதே போல, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா “பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணியில் மமக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காகிய இரண்டு கட்சிகளுமே திமுக கூட்டணியில்தான் தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் மமக போராடி 5 தொகுதிகளைக் கேட்டு வாங்கியது. ஆனால், மமகவுக்கு தேவையில்லாத ஒரு தொகுதியை திமுக அளிக்க முன்வந்ததால் அந்த தொகுதி வேண்டாம் என்று கூறிவிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதே போல, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 5 தொகுதிகளை கேட்டு வாங்கி போட்டியிட்டது. ஆனால், கடையநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
source :https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-alliance-seats-allotted-3-seats-for-iuml-2-seats-for-mmk-in-tamil-nadu-assembly-elections-2021-250277/