மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, இடதுசாரி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பதற்கு 148 தொகுதிகள் தேவை என்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 210க்கும் மேற்பட்ட தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதையடுத்து மூன்றாவது முறையாக திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மூன்றாவது முறையாக மமதா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து மமதா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மமதா பானர்ஜியின் வீட்டுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் அளவில் குவிந்தனர்.
தேர்தல் வெற்றி குறித்து பேசிய மமதா பானர்ஜி, வங்கம் இந்தியாவை காப்பாற்றி விட்டதாக கூறினார். 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதாக பாஜக தலைவர்கள் கூறியதை சுட்டிக்காட்டிய மமதா, ஆனால், அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். மேற்கு வங்கம் பாஜகவின் ஈகோவை அழித்து விட்டதாகவும் மமதா குறிப்பிட்டார். இதனிடையே மமதா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிப்பதாக கூறியுள்ளார். மேற்கு வங்க மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் கொரோனா தொற்றை வெல்வதற்கும் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
source https://www.news7tamil.live/trinamool-congress-win-in-westbengal.html