செவ்வாய், 4 மே, 2021

நண்பகல் வரை மளிகை, காய்கறி கடைகள்; தமிழக அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் என்ன?

4.5.2021 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசு வரும் மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தமிழகத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை செயல்படலாம் என்ற கட்டுப்பாடுகளை நீக்கி, குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில், ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பயணிகள் ரயில், பேருந்துகள், டாக்ஸியில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் குறித்தான அறிக்கையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுகிறது. மீன், இறைச்சிக் கடைகளுக்கு சனி, ஞாயிறுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, வாரத்தின் பிற நாள்களிலும் காலை 6 மணி முதல் மதியம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்களுக்கு எற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இயங்கும் மளிகைக் கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் நன்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண, இறப்பு நிகழ்வுகளில் 25 பேர் வரை கலந்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20 பேர் என எண்ணிக்கையை குறைத்துள்ளது தமிழக அரசு.

கொரோனா பரவுவதைத் தடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-announces-new-covid-19-restrictions-closure-of-grocery-shops-non-ac-twelve-pm-299724/