கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில், செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக உழைத்துவரும் பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் இனி முன்களப் பணியாளர்களே என்று தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரம் முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்களும் பலியாகியுள்ளனர். அதே போல, முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர்களுக்கு தமிழ அரசு மருத்துவ உதவிகளை அளிக்கிறது. முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் இழப்பீடு நிதியை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் ஆபத்தான காலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உழைத்துவரும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக உழைத்துவரும் பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் இனி முன்களப் பணியாளர்களே என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மழை – வெயில் – பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் – சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுடைய இந்த அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை பத்திகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் ” என்று முதல்வர் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றி,
களப்பணியில் ஈடுபட்டு கொரோனா விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டு இருக்கும் பத்திரிகை ஊடகவியலாளர்களை , முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் முன்வைத்தது.
இந்த கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் உடனுக்குடன் ஏற்று “கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.” என்று அறிக்கை மூலமாக நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி உள்ள திமுக தலைவர் – முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-announced-journalists-as-frontline-workers-299765/