புதன், 5 மே, 2021

மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

 மாகராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா சட்டத்தை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது. மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்களை இடஒதுக்கீடு வகைக்குள் கொண்டுவருவதற்கு கல்வி மற்றும் சமூக ரீதியாக பிந்தங்கிய சமூகமாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1992-ம் ஆண்டு இந்திரா சாஹ்னே தீர்ப்பான 50 சதவீதத்துக்கு அதிகமான இட ஒதுக்கீட்டை அசாதாரண சூழலில் பரிசீலிக்கலாம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க மறுத்துவிட்டனர். நியாயமான எந்தவொரு விதிவிலக்கான சூழ்நிலையும் இல்லாமல் 50 சதவிகித உச்சவரம்பை மீறுவது அரசியலமைப்பு சட்டம் 14 வது ஷரத்தை மீறுவதாகும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

மராத்தாக்கள் பின்தங்கியவர்கள் என்று நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் ஆணைக்குழுவின் கண்டறிந்ததன் அடிப்படையில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீடு சட்டம் 2018-ஐ இயற்றிய மாநில அரசு, இந்த இடஒதுக்கீட்டை வழங்க எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதில்லை என்று கூறி 102வது அரசியலமைப்பு திருத்தத்தையும் நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்தத் திருத்தம் அரசியலமைப்பில் 338-பி மற்றும் 342-ஏ ஷரத்துகளை இணைத்தது.

102வது திருத்தம் பிந்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் அரசியலமைப்பு நிலையைக் கையாள்கிறது. பிரிவு 334 பி ஆணைக்குழுவின் கட்டமைப்பு, கடமைகள் மற்றும் அதிகாரங்களைக் கையாள்கிறது. அதே நேரத்தில் 342A ஒரு வகுப்பை சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய (SEBC) வகுப்பு என்று அறிவிக்க ஜனாதிபதியின் அதிகாரம் மற்றும் மத்திய SEBC பட்டியலை மாற்ற பாராளுமன்றத்தின் அதிகாரம் பற்றி பேசுகிறது.

மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீடு (மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இடங்கள் மற்றும் மாநிலத்தின் கீழ் உள்ள பொது சேவைகள் மற்றும் பதவிகளில் நியமனங்கள்) ஆகியவற்றில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் (SEBC) சட்டம் 2018 செல்லும் என அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்திய பம்பாய் உயர்நீதிமன்றம் ஜூன் 27, 2019 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையில் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது.

மார்ச் 26ம் தேதி மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேதியை ஒதுக்கியது. உயர்நீதிமன்றம், 2019 ஜூன் மாதம் இந்த இடஒதுக்கீடு சட்டத்தை ஆதரித்தபோது, 16 சதவீத இடஒதுக்கீடு நியாயமானது அல்ல என்றும் வேலைவாய்ப்பில் 12 சதவீதத்துக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 13 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் கூறியது.

மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமன்றத் அதிகாரம் மகாராஷ்டிராவுக்கு உள்ளது என்றும், அதன் முடிவு அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும், 102 வது திருத்தம் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் பட்டியலை (SEBC) அறிவிக்கும் அதிகாரத்தை மறுக்கவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

source https://tamil.indianexpress.com/india/supreme-court-quashes-maharashtra-law-granting-reservation-to-maratha-community-300226/