வெள்ளி, 7 மே, 2021

எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்

 2016ம் ஆண்டு தமிழகத்தின் 15வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. 6வது முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக மே 23ம் தேதி அன்று, அன்றைய ஆளுநர் ரோசைய்யா முன்னிலையில் அரசு பொறுப்பேற்றது. அப்போது எதிர்க்கட்சி சார்பில் திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவுடன் அன்றைய திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அந்த பதவி ஏற்பு நிகழ்வில் முக ஸ்டாலின் மற்றும் இதர திமுக எம்.எல்.ஏக்கள் பின்வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

முன்வரிசையில் தேர்தலில் தோல்வியுற்ற சரத்குமார் போன்றோருக்கு இடம் தந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஏன் பின்வரிசையில் அமர்த்தப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்தன. திமுகவை திட்டமிட்டே அவமானப்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காத முக ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”தமிழக முதல்வரின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்” என்று எழுதியிருந்தார்.

அடுத்த நாள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட செல்வி ஜெயலலிதா, முக ஸ்டாலின் நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு என்னுடைய நன்றிகள். விழா அரங்கில் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கினார்கள். அங்கு தான் முக ஸ்டாலின் அமர்ந்திருந்தார். அவருக்கு அதனால் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், இருக்கை ஒதுக்கீடு திமுகவையோ ஸ்டாலினையோ அவமதிக்கும் நோக்கில் அது அமைக்கப்படவில்லை என்று நான் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே தெரிவித்திருந்தால் நான் அவரை முன்வரிசையில் அமர்த்தியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காக அவரும் அவருடைய கட்சியும் செயல்பட என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

2021 முதல்வர் பதவி ஏற்பு நிகழ்வு

இன்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் இன்றைய நிகழ்வில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி மலர் செண்டு கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆளுநருடனான நிகழ்வின் போது ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களுடன் ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றாக அமர்ந்து மற்றவர்களுடன் உரையாடினார். தமிழகத்தில் அரசியல் தளத்தில் மாபெரும் பண்பட்ட நாகரீகம் தொடர்ந்து பேணி காக்கப்படுவது மக்கள் மத்தியில் தலைவர்கள் குறித்த அபிப்ராயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாபெரும் இழப்புகளின் போது ஆறுதலாக துணை நின்ற ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள்

செல்வி ஜெயலலிதா மரணம் அடைந்த போது, “அதிமுக தேர்தலில் தோல்வியுற வேண்டும் என்று தான் நினைப்போமே தவிர, ஜெயலலிதா இல்லாமல் போக வேண்டும் என்று நாங்கள் நினைத்ததே இல்லை” என்று கலைஞர் எழுதிய உரையை முக ஸ்டாலின் வாசித்தார்.

2018ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை மெரினா கடற்கரையில் அமைக்க திமுக ஒரு யுத்தமே நடத்த வேண்டியது இருந்தது. ஆனால் கலைஞர் கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய உரையில் ”இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையிலே, கலைஞர் செய்த சாதனை இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அன்னாருடைய மறைவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் எதிர்கட்சி தலைவருக்கும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், எதிர்கட்சி துணைத் தலைவருக்கும், அவர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இரங்கல் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றி பேசிய மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு சபாநாயகர் மற்றும் பலருக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலை தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம் அடைந்த போது எதிர்க்கட்சி தலைவர்கள் முக ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் நேரில் சென்று பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தும் ஆறுதல் கூறியும் வந்தார் முக ஸ்டாலின்.