நாகை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி நேற்று (மே 4) நள்ளிரவில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் பா.ஜ.க இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற கணக்கில் “மே இரண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, வரலாற்றின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய பொன் நாள். தமிழிசை அவர்கள் மந்திரமாய் முழங்கிய தாமரை மலர்ந்தே தீரும் என்பதற்கிணங்க இன்று தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது. இக்காலத்தில் பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்குக்கும் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கும் கூட்டணி நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்.” என்று பதிவிடப்பட்டிருந்தது.
விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் கணக்கில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் விசிக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் கணக்கில் உள்ள தம்பிக்கோட்டையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அன்பரசன் என்ற நபரை கைது செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாய நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் முகமது யஷ்யா புகார் அளித்தார்.
இதனிடையே, பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற பேஸ்புக் கணக்கில் உள்ள நபர் ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதில், “என்னுடைய முகநூலில் நான் நேற்று எழுந்தியிருந்த ஆளூர் ஷாநவாஸ் அவர்களை பற்றிய பதிவு அவருடைய பெயரை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். தமிழன் பிரசன்னா அவர்களின் டிவிட்டர் பதிவை முன்னிறுத்தி எழுதிய பதிவில் ஷா நவாஸ் என்று தவறுதலாக பதிவிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. தமிழன் பிரசன்னா அவர்களின் டிவிட்டர் பதிவை ஒட்டி அப்படி எழுதியிருந்தேன். இதற்கு முன் நான் எப்போதும் யாரும் புண்படும்படி எழுதியதும் இல்லை. வருந்துகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷநாவஸ்க்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக முகமது யஷ்யா அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை போலீசார், பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் கணக்கில் உள்ள பாஜக நிர்வாகி அன்பரசனை நேற்று (மே 4) கைது செய்தனர். மேலும், பாஜக நிர்வாகி அன்பரசன் மீது போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் 153, 153 ஏ, 501(ii)(b), 505 (ii)(c) 67 IT Act, 506(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் இடம் கேட்டபோது, அவர் ஐ.இ. தமிழுக்கு கூறியதாவது: “அவர் இதை என்ன நோக்கி சொல்லவில்லை தமிழன் பிரசன்னாவை நோக்கி சொன்னேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது, தமிழன் பிரசன்னாவுக்கு கொலைமிரட்டல் விடுத்ததை அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர் இப்படி பதிவிட்டது தவறு. நான் வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லவில்லை. நான் ஷாநவாஸை சொல்லவில்லை. தமிழன் பிரசன்னாவை சொன்னேன் என்று அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது யாரை சொல்லியிருந்தாலும் கொலை மிரட்டல் விடுப்பது போல எழுதுவது தவறுதான்.
இது பாஜகவின் அணுகுமுறை. அவர்கள் எப்போதும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமாட்டார்கள். இது போல உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பதுதான் அவர்கள் செய்வது. இதனை அவர்கள் தலைமையும் கட்டுப்படுத்தாது.
திமுக தொண்டர்கள் யாரோ 2 பேர் அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்தினார்கள் என்றதும் திமுக தலைமையே களத்தில் இறங்குகிறது. உடனடியாக அந்த நபர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள், கைது செய்கிறார்கள். அதை கண்டிக்கிறார்கள். உடனடியாக மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு செல்கிறார்கள். அந்த பலகையை எடுத்து அதே இடத்தில் வைக்கிறார்கள். இப்படி ஒரு எதிர்வினையைப் பார்க்கிறோம். ஒரு செயலுக்கு அவர்கள் கட்சியில் இருந்தே ஒரு எதிர்வினை இருக்கிறது.
இப்படி பாஜகவில் இந்த கொலை மிரட்டல் விடுத்த விஷயத்தை யாராவது கண்டித்தார்களா? இதையெல்லாம் செய்யக்கூடாது, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று யாராவது கண்டித்தார்களா? அவர்கள் அதை கண்டிக்க செய்ய மாட்டார்கள். மாறாக அதை ஊக்கப்படுத்தவே செய்வார்கள். அதுதான் பாஜகவின் உடைய இயல்பு. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-functionary-arrest-for-threatening-to-kill-to-vck-mla-aloor-sha-navas-300179/