புதன், 5 மே, 2021

காந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்

 மகாத்மா காந்தியின் கடைசி காலங்களில் அவருக்கு தனிப்பட்ட செயலாளராக இருந்த வி.கல்யாணம் வயது மூப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 99.

சென்னை படூரில் உள்ள கல்யாணத்தின் இளைய மகள் நளினியின் இல்லத்தில் மதியம் 3.30 மணியளவில் கல்யாணம் அவர்களின் உயிர் பிரிந்தது

அவரது இறுதி சடங்குகள் மே 5ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் பெசண்ட் நகர் தகன கூடத்தில் நடைபெறும்.

வி.கல்யாணம் அவர்கள் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சிம்லாவில் பிறந்தார். 1944 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில் கல்யாணம் மகாத்மா காந்தியுடன் இருந்தார் என்று கல்யாணத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய குமாரி எஸ்.நீலகண்டன் கூறுகிறார்.

மேலும், “கல்யாணம் மகாராஷ்டிராவில் உள்ள சேவகிராம் ஆசிரமத்தில் இருந்தார், அவர் அங்கு மகாத்மா காந்திக்கு பல்வேறு மொழிகளில் வந்த கடிதங்களை தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். அவர் நான்கு ஆண்டுகளாக தேச தந்தைக்கு உதவி செய்து வருகிறார்” என்றும் அவர் கூறினார்.



1948ஆம் ஆண்டு ஜனவரி 30, அன்று புதுதில்லியில் தேசத்தின் தந்தை படுகொலை செய்யப்பட்டபோது கல்யாணம் மகாத்மா காந்தியுடன் இருந்தார். காந்தியின் மரணத்தை முதலில் நேருவுக்கும் படேலுக்கும் தெரிவித்தவர் இவரே.

1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் பின்னர் காந்தி இறக்கும் வரை அவருடன் இருந்தார்.

ராஜாஜி மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகிய இருவருடனும் கல்யாணம் பணிபுரிந்துள்ளார். காந்தியின் பெருமைகளை காங்கிரஸ் கட்சி போற்ற தவறியதால் காங்கிரஸை கல்யாணம் விமர்சனம் செய்தார். கல்யாணம் கடைசியாக 2014ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/kalyanam-gandhis-former-personal-secretary-dead-300082/