செவ்வாய், 1 ஜூன், 2021

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாய் ஒய்வு; மம்தாவிற்கு ஆலோசகராக நியமனம்

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்களன்று, மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தியோபத்யாய் தனக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால நீட்டிப்பை ஏற்க மறுத்து தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறினார். அவர் இப்போது தனது தலைமை ஆலோசகராக இருப்பார் என்றும் மம்தா கூறினார்.

மாநில உள்துறை செயலாளர் எச்.கே.திவேதி புதிய மாநில தலைமை செயலாளராகவும், பி.பி.கோபாலிகா புதிய மாநில உள்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இன்று, அலபன் பந்தியோபத்யாய் தலைமைச் செயலாளராக ஓய்வு பெற்றார். அவர் முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பதவியில் நாளை முதல் மூன்று ஆண்டு காலம் பணியாற்றத் தொடங்குவார். எச்.கே.திவேதி புதிய மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ”என்று மம்தா பானர்ஜி செய்தி சந்திப்பில் கூறினார்.

டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக் கொண்டதிலிருந்தே, பந்தியோபத்யாய் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு இழுபறி போருக்கு மத்தியில் இருந்தார்.

நார்த் ப்ளாக்கில் ரிப்போர்ட் செய்யுமாறு பந்தியோபத்யாய்க்கு  மத்திய அரசு செவ்வாயன்று, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் இரண்டாவது கடிதம் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்குப் பிறகு வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி அழைத்த யாஸ் சூறாவளி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்தை மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தவிர்த்திருந்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய அரசுக்கு சேவை செய்வதற்காக பந்தியோபத்யாய்யை டெல்லிக்கு மத்திய அரசு திரும்ப அழைத்தது.

முன்னதாக மே 24 அன்று, பந்தியோபத்யாயின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 31 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மேற்கு வங்க அரசு முன்மொழிந்தது. நீட்டிப்பு பெறுவதற்கு முன்பு, பந்தியோபத்யாய் மே 31 அன்று ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்தார்.

சனிக்கிழமையன்று, மம்தா பானர்ஜி மத்திய அரசு “வெண்டெட்டா (பழிவாங்கும்) அரசியலை” தொடர்கிறது என்று குற்றம் சாட்டியதோடு, மோடியும் ஷாவும் ஒவ்வொரு கட்டத்திலும் தனது அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/bengal-chief-secretary-to-retire-today-wont-go-to-delhi-mamata-banerjee-309228/