Why NASA is sending water bears : ஜூன் 3ம் தேதி அன்று, இருளில் ஒளிரும் ஸ்கிவிட் மீன்கள் (glow-in-the-dark baby squids) 128-ஐயும், 5000 பாசிப் பன்றி என வழங்கப்படும் நீர்க்கரடிகளையும் நாசா, ஆராய்ச்சிக்காக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளது.
இந்த நீர் உயிரினங்கள் ஸ்பேஸ் எக்ஸின் 22வது கார்கோ ரிசப்ளை மிஷன் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நீர் உயிரினங்கள் நீண்ட காலத்திற்கு விண்ணில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள செல்லும் விண்வெளி வீரர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க விஞ்ஞானிகளுக்கு உதவும் சோதனைகளின் ஒரு பகுதியாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி
பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நீண்ட காலத்திற்கு சுற்றி வரும் விண்வெளி நிலையம் ஒரு மிகப்பெரிய விண்கலமாகும். இது கிட்டத்தட்ட வானில் செயல்படும் ஒரு ஆராய்ச்சி நிலையம் ஆகும். இங்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வந்து வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் தங்கி மைக்ரோ கிராவிட்டி சோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் 1998ம் ஆண்டில் இருந்து விண்வெளியில் உள்ளது. நாசா(அமெரிக்கா) , ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா), ஜாக்ஸா (ஜப்பான்), ஈ.எஸ்.ஏ (ஐரோப்பா), சி.எஸ்.ஏ (கனடா) என ஐந்து நாடுகளின் விண்வெளி நிலைய ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்பால் இயங்கி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில், மனிதர்கள் தொடர்ச்சியாக அங்கே வாழ்ந்து வந்து, 150 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அறிவியல் ஆராய்ச்சிகளை மைக்ரோ கிராவிட்டி சூழலில் நடத்தியுள்ளனர். பூமியில் சாத்தியமில்லாத ஆராய்ச்சியில் முன்னேற்றங்களை இங்கே காண முடிந்தது.
இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 3000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளை 108 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. உயிரியல், மனித உடலியல் மற்றும் இயற்பியல், பொருள் மற்றும் விண்வெளி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் ஏன் நீர் வாழ் விலங்குகள் அனுப்பப்படுகிறது?
நீர்க்கரடிகள் மற்றும் பாப்டைல் ஸ்க்விட்கள் மிதக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனைக்கு வைக்கப்படும். அவைகள் சிறப்பு உயிரியல் கலாச்சாரத்தில் வளர்த்தெடுப்பதற்கு முன்பு பாதி-உறைந்த நிலையில் அங்கே அனுப்பப்படுகிறது என்று சி.என்.என். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 மி.மீ மட்டுமே அளவு கொண்டுள்ள நீர்க் கரடிகள் எவ்வாறு பூமியில் அதிக அழுத்தம், வெப்பநிலை மற்றும் கதிரியக்கம் போன்ற சவாலான சூழல்களில் வளர்கிறது என்பதையும், விண்வெளி சூழலில் அது எவ்வாறு வாழும் என்பதையும் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் நீர்க்கரடிகளின் கடினத்தன்மையை ஆராயவும் மிகவும் நெகிழக்கூடியதாக மாற அனுமதிக்கும் மரபணுக்களை அடையாளம் காணவும் முடியும்.
குறைந்த ஈர்ப்பு நிலையில் நீர் கரடிகள் எவ்வாறு உயிர்வாழ முடியும் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், விண்வெளி வீரர்களை நீண்ட கால விண்வெளி பயணங்களில் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த நுட்பங்களை வடிவமைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
விலங்கு-நுண்ணுயிர் தொடர்புகளில் மைக்ரோ கிராவிட்டி (UMAMI – Understanding of Microgravity on Animal-Microbe Interactions) ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மைக்ரோகிராவிட்டி நிலைமைகளில் 3 மி.மீ அளவே உடைய பாப்டைல் ஸ்க்விட்களுக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே இருக்கும் உறவை ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்ய உள்ளனர்.
விலங்குகளின் திசுக்களின் இயல்பான வளர்ச்சியிலும், மனித ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் நுண்ணுயிரிகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, மேலும் ஈர்ப்பு குறைபாடு இருக்கும்போது நுண்ணுயிரிகள் விலங்குகளுடன் எவ்வாறு பயனடைகின்றன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி அனுமதிக்கும்.
மனித உடலில், நுண்ணுயிரிகள் செரிமானம், நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு பங்களிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளுடனான நமது உறவில் இடையூறு ஏற்படுவது நோய்க்கு வழிவகுக்கும்.
இந்த ஆராய்ச்சி முக்கியமான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். பூமியில், விலங்குகளுக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான சிக்கலான உறவைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகளைக் கண்டுபிடித்து, சிறந்த மனித ஆரோக்கியத்தை உறுதி செய்வோம் என்று நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் விண்வெளி ஏஜென்சிகள் விண்வெளி வீரர்களை நீண்ட கால பயணங்களில் பாதகமான ஹோஸ்ட்-நுண்ணுயிர் மாற்றங்களிலிருந்து பாதுகாக்க சிறந்த நடவடிக்கைகளை உருவாக்க உதவும்.