Oxygen Ban Tamil News: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை குறைந்து உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 22 முதல் நடைமுறையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு திரவ ஆக்ஸிஜன் வழங்குவதற்கான தடையை மத்திய அரசு விரைவில் நீக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதத்திற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 8,900 மெட்ரிக் டன் உச்சத்தில் இருந்த மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை, தற்போது ஒரு நாளைக்கு சுமார் 6,000 மெட்ரிக் டன் (எம்டி) ஆக குறைந்துள்ளது என்றும், ஆக்ஸிஜன் ஆலைகளால் 5,500 மெட்ரிக் டன் சப்ளை செய்யப்படுகையில், சுமார் 500 மெட்ரிக் டன் உள்ளூர் மூலங்களிலிருந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிற்சாலைகளுக்கு திரவ ஆக்ஸிஜன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் எப்போது தளர்த்தக்கூடும் என்ற கேள்விக்கு, “தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆக்ஸிஜன் தேவைகள் சரிவைக் காட்டினால், தளர்வு ஏற்படலாம். ஆக்ஸிஜன் தேவையில் இந்த இரு மாநிலங்களும் இப்போது நிலைபெறுகின்றன. ஓரிரு நாட்களில் இது குறித்த முடிவு எட்டப்படும் என அறியப்படுகிறது” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு திரவ ஆக்ஸிஜன் வழங்குவதை கடந்த மாதத்தில் (22.04.2021) தடை செய்தது. இதனை மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழு -2 பரிந்துரை செய்திருந்தது.
மே 9 ஆம் தேதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த ஆக்ஸிஜன் 8,944 மெட்ரிக் டன் உச்சத்தை எட்டியதாக அந்த அதிகாரமளிக்கப்பட்ட குழு -2 அதன் தரவில் காட்டியது. இது மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் ஒரு நாளைக்கு 8,100 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிட்டது, ஆனால் மே 20 அன்று 8,334 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ‘மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த ஆக்ஸிஜன்’ பற்றிய தரவுகளில் உற்பத்தியாளர்கள் மற்றும் மறு நிரப்பிகளால் மருத்துவமனைகளுக்கு மொத்தமாக திரவ ஆக்ஸிஜனை வழங்குவதும், அதே போல் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு மறு நிரப்பிகளால் வழங்குவதும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று மே 30 அன்று 1.65 லட்சம் பேருக்கு புதியதாக தொற்று பதிவாகியுள்ளது. தொற்றுக்கு நாடு முழுவதும் 21.14 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், தற்போது குறைக்கப்பட்ட நாளொன்றுக்கு 6,000 மெட்ரிக் டன் கூட, மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை கடந்த ஆண்டு கோவிட் -19 இன் முதல் அலைகளின் போது பதிவு செய்யப்பட்ட தேவையை விட அதிகமாக உள்ளது.
கடந்த செப்டம்பர் 29, 2020 அன்று பரவி இருந்த முதல் அலையின் போது ஆக்சிஜனின் உச்ச தேவை 3,095 மெட்ரிக் டன் ஆக இருந்தது. அதன் பின்னர் தேவை கீழ்நோக்கிச் சென்றது, மேலும் 1,559 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனின் விற்பனை இந்த ஆண்டு மார்ச் 31 அன்று பதிவு செய்யப்பட்டது.
தொற்று பரவல் மற்றும் நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்தவுடன் ஆக்சிஜனுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது. இது ஏப்ரல் 30 அன்று ஒரு நாளைக்கு 8,000 மெட்ரிக் டன் கடந்தது. மேலும் மே முதல் வாரத்திலும் தொடர்ந்தது.
source https://tamil.indianexpress.com/india/oxygen-ban-tamil-news-ban-on-o2-supply-to-industry-may-go-308899/