உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் பருவமழை காலங்களில் முன்பு இல்லாததைக் காட்டிலும் அதிக மழைப் பொழிவு ஏற்படும் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பருவமழை காலங்களில் பெரிய தாக்கத்தை காலநிலை மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். கணினி மாதிரிகளை வைத்து கடந்த கால ஆராய்ச்சிகளை கவனித்தால் உலக வெப்பமயமாதல், பசுமையக வாயுக்களின் இருப்பை வளிமண்டலத்தில் அதிகமாக்குகிறது, வெப்பமான வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கிறது, இதன் விளைவாக தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைப் பொழிவு கணிக்க இயலாததாகவும், அதிகப்படியான மழைப் பொழிவை தோற்றுவிக்கும் வகையிலும் இருப்பது உறுதியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.
Global warming makes India’s monsoon season wetter – ஆராய்ச்சி முடிவுகள்
வெள்ளிக்கிழமை சயன்ஸ் அட்வான்ஸஸ் ( Science Advances) என்ற இதழில் வெளியான புதிய ஆய்வுக் கட்டுரை முடிவு, கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்கூறிய கருத்தினை உறுதி செய்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் பருவமழையானது ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இது தெற்காசியாவின் வேளாண் பொருளாதாரத்திற்கு தேவையான மழைப் பொழிவை ஏற்படுத்துகிறது. இந்த பருவமழை காலம் உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பகுதியினரை ஒரு வழி அல்லது மற்றொரு வழியில் பாதிக்கிறது. பயிர்களை செழிப்புறவைக்கிறது அல்லது நாசமடைய வைக்கிறது. மோசமான வெள்ள சூழலை உருவாக்கி உயிர்களை கொல்கிறது மற்றும் மாசுகளை பரப்புகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பருவமழை மாறுபாடுகள் இப்பகுதிகளை, அதன் வரலாற்றை மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
10 லட்சம் ஆண்டுகளை ஆய்வு செய்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் ஆராய்ச்சியாளர்கள் சேற்று மண் சோதனைகளை மேற்கொண்டனர். பருவமழையில் கிடைக்கும் நீர் இறுதியில் கலக்கும் வங்கக் கடல் ஓரங்களில் சேற்றை துளையிட்டு மாதிரிகளை பெற்று ஆய்வுகளை நடத்தினர். இந்த மாதிரிகள் 200 மீட்டர் நீளத்தில் இருந்து பெறப்பட்டவை. பருவ காலங்களில் பெய்யும் மழைப் பொழிவை பற்றிய ஆய்வை மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது. அதிகமாக மழை பெய்யும் காலங்களில் அதிக அளவு நன்னீர் வங்கக் கடலில் வந்து கலக்கிறது.
நீர் மற்றும் காற்றில் வாழும் நுண்ணுயிர்களை நாம் ப்ளாங்க்டன் (Plankton) என்று வழங்குகின்றோம். இது நீரின் ஓட்டத்திற்கு எதிராக பயணித்து உயிர் வாழ முடியாது. பருவமழை காலங்களில் மேற்பரப்பில் வாழும் இந்த நுண்ணுயிர்கள் இறந்து அடுக்குகளாக, படிமங்களாக்கப்பட்டு மண்ணில் சேகரமாகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ஆராய்ச்சியாளர்கள், கடலோரங்களில் இருந்து பெறப்பட்ட சேற்றுமண்ணில் கண்டெடுக்கப்பட்ட ப்ளாங்க்டன் படிமங்களை ஆய்வு செய்தனர். ப்ளாங்க்டன்கள் வாழ்ந்த நீரில் இருக்கும் உப்பின் அளவை அறிந்து கொள்ள ஆக்ஸிஜன் ஐசோடோப்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.
வளிமண்டலத்தில் அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடு, உலக அளவில் குறைவான பனிப்பொழிவு காலங்கள் மற்றும் பிராந்திய பகுதிகளில் ஈரப்பதம் மிக்க காற்று வீசுவது அதிகரித்த காலங்களில் அதிக மழைப் பொழிவும், கடல் நீரில் உப்பின் அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
தற்போது மனித செயல்பாடுகள் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற பசுமையக வாயுக்களின் அளவை உயர்த்தியுள்ளதால் மீண்டும் இது போன்ற மோசமான பருவமழை பாதிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ப்ரவுன் பல்கலைக்கழகத்தில், புவியியல், சுற்றுச்சூழல் மற்றும் கிரகவியல் பேராசிரியராக பணியாற்றும் ஸ்டீவன் க்ளெமென்ஸ் இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர். கடந்த 10 லட்சம் ஆண்டுகளில் வளிமண்டலத்தில் எப்போதெல்லாம் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துள்ளதோ அப்போதெல்லாம் பருவமழை காலங்களில் தெற்காசியாவில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் நிறுவனத்தில் பருவநிலை இயங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ஆண்ட்ரஸ் லெவர்மன், இந்த ஆராய்ச்சி முடிவுகளை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய தரவாகும். நம்முடைய உலகின் 10 லட்சம் ஆண்டுகால வரலாற்றை பிரதிபலிக்கும் தரவுகளை பார்ப்பதும், ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும் இயற்பியல் விதிகள் அவற்றின் தடங்களை தொல்பதிவுகளில் விட்டுச் செல்வதை பார்க்கும் போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்களில் ஒருவர் இல்லை. இருப்பினும் இது தொடர்பான ஆய்வுகளை அவரும் மேற்கொண்டு வருகிறார்.
டாக்டர் லெவர்மென் “இதனால் ஏற்படும் விளைவுகள் இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் மோசமானதாக இருக்கும். ஏற்கனவே அளவுக்கு அதிகமான மழைப் பொழிவை பருவமழை காலங்கள் தருகிறது. இது எப்போதும் போல் அழிவைத் தரக்கூடியதாக இருக்கும்” என்று கூறிய அவர், “பேரழிவைத் தரக்கூடிய பருவகாலங்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்தும் அதிகரித்து வருகிறது. பருவகாலங்களில் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற தன்மை காரணமாக உலகின் மிகப்பெரிய, சவலான ஜனநாயகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றும் கூறினார்.
டாக்டர் க்ளெமென்ஸ் மற்றும் இதர ஆராய்ச்சியாளர்கள் ஜோய்டெஸ் ரெசலியூசன் என்ற மாற்றப்பட்ட எண்ணெய் துளையிடும் கப்பலில் இரண்டு மாதம் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட போது பெற்றனர். நவம்பர் 2014ம் ஆண்டு 100 க்ரூ மெம்பர்களும் 30 ஆராய்ச்சியாளர்களும் அடங்கிய பயணத்தை துவங்கியது. கிறித்துமஸ் போதும் நாங்கள் அங்கே இருந்தோம். வீட்டை விட்டு வெளியே இருப்பது மிகவும் கடினமானது. ஆனால் அதற்கான பலன்கள் தற்போது வந்துள்ளன என்று க்ளெமென்ஸ் கூறினார்.
தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை இது
தமிழ் மொழியாக்கம் : நித்யா பாண்டியன்
source https://tamil.indianexpress.com/explained/global-warming-makes-indias-monsoon-season-wetter-and-dangerous-suggests-new-research-311707/