ஞாயிறு, 17 அக்டோபர், 2021

ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கிய சசிகலா

 

அதிமுகவின் 50ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை (அக். 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் மனு அளித்திருந்தார். இந்த தகவல் பரவ தொடங்கியதும், தொண்டர்கள் சசிகலா வீட்டின் முன்பும், ஜெயலலிதா நினைவிடத்திலும் திரண்டனர்.

சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் சசிகலா இன்று காலை மெரினா புறப்பட்டு சென்றார். சாலையில் திரண்டிருந்த தொண்டர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த அவர், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன்பின், எம். ஜி.ஆர், அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, விடுதலையாகி வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ” ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். 4 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை தற்போது இறக்கி வைத்துள்ளேன் தலைவரும், அம்மாவும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.தொண்டர்களையும் கழகத்தையும் தலைவரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்” என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vk-sasikala-first-visit-to-jayalalitha-memorial-after-free-from-prison-356331/