புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிய காவல் ஆணையர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அண்மையில், சென்னையில் உள்ள தாம்பரம், ஆவடி பகுதிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி அறிவித்தார்.
அதன்படி, சென்னை பெருநகர காவல்துறை 3ஆக பிரித்து தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைகள் வரையறை செய்யப்படும் பணிகள் நடைபெற்றது. இதனால், புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிய போலீஸ் கமிஷனர் யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிய மாநகர காவல் ஆணையர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (அக்டோபர் 01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“காவல் நிர்வாகம் ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு சென்னை ஏ.டி.ஜி.பி.யாக உள்ள சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/new-police-commissioners-appointed-to-tambaram-and-avadi-police-commissioner-office-349749/