நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 4 பேர்களை கடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நிரஜ் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்குள் 4 பேர்களை கடித்துக் கொன்றது. அதில், கடந்த ஆண்டு மசினகுடியை சேர்ந்த கௌரி என்ற பெண் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தபோது கணவர் கண்ணெதிரே புலி தாக்கி கொன்றது. அதோடு, அவரின் உடலை புலி நீண்ட தூரம் இழுத்துச் சென்றது.
இதையடுத்து, சில வாரங்கள் கழித்து அந்த பகுதியில், பெண் புலிக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதனால் பெண்ணை கொன்ற புலி இறந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 19ம் தேதி கூடலூர் அருகே முதுமலை பகுதியை சேர்ந்த குஞ்சு கிருஷ்ணன் என்ற விவசாயியை புலி கடித்து கொன்றது.
இதைத் தொடர்ந்து, தேவர்சோலை அருகே தேவன் – 1 பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளி சந்திரன் என்பவரை புலி தாக்கி கொன்றது. புலி மனிதர்களைக் கொல்வது இத்துடன் நிற்கவிலை. இதையடுத்து, மசினகுடி அருகே இந்த ஆட்கொல்லி புலி 4வது நபராக முதியவர் மங்கல பஸ்வனை கடித்துக்கொன்றது.
ஒரு ஆண்டுக்குள் 4 பேர்களை கடித்துக் கொன்ற டி-23 என்று பெயரிடப்பட்டுள்ள ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நிரஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல பிரத்தியேக பயிற்சி பெற்ற அதிரடைபடையினர் மசினகுடி பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் நாளை (அக்டோபர் 02) காலை 20 பேர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து புலியை கண்டவுடன் சுட்டு கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்கும் வரை அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வன பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/forest-department-chief-order-to-shoot-the-tiger-who-killed-4-people-349906/