ஞாயிறு, 3 அக்டோபர், 2021

அதிமுகவை விட டபுள் மடங்கு… தேர்தலுக்கு செலவிட்ட திமுக

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்கு செலவிட்ட தொகையைத் தேசிய மற்றும் மாநில கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் நேற்று சமர்ப்பித்துள்ளன. பாஜக கட்சி மட்டும் தேர்தல் செலவு விவரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. 


புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 154.28 கோடி ரூபாயை மேற்கு வங்கத்தின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ரூ. 84.93 கோடியை மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு  பிரித்துச் செலவிட்டுள்ளது. 
திரிணமூல் தனது தேர்தல் செலவுகளை இரண்டாகப் பிரித்துள்ளது. கட்சித் தலைமை செலவுக்கு 79.66 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்கான செலவுக்கு 74.61 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. கட்சி தலைமைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 33.2 கோடி ரூபாய் நட்சத்திர வேட்பாளர்களின் பிரச்சார பயணத்திற்காகவும், 11.93 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

தேர்தல் செலவு பட்டியலில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் மொத்தமாக 114.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், 39.78 கோடி ரூபாய் ஊடகத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிலுவையில் உள்ள குற்றச்செயல்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்காக 54.47 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.. 

அதிமுக கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இருமாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் தேர்தலுக்கும் மொத்தமாகவே 57.33 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், பெரும் பங்கான 56.65 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், செய்தித்தாள், தொலைக்காட்சி விளம்பரம், ஆன்லைன் விளம்பரம், பல்க் எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.


சிபிஐ கட்சி 5 மாநில தேர்தலுக்கு மொத்தமாகவே ரூ.13.19 கோடி செலவிட்டுள்ளது. அசாமின் அசோம் கண பரிஷத், தனது மாநில தேர்தலுக்கு ₹ 15.16 லட்சம் செலவழித்துள்ளது. அதே போல, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மாநில தேர்தலுக்கு 1.29 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 03 10 2021 

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-spent-114-crore-rupees-for-tn-and-puducherry-assembly-election/