02 10 2021
2017, 2018 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்ட கனமழை, கல்லாறு பகுதிகளில் பல நெடுங்காலமாக வாழ்ந்து வந்த காடர் பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதியை கேள்விக்குறியாக்கியது. இரு பக்கங்களும் மலைகள் சூழ, தொடர் கனமழை, இடைமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்ணின் இறுதியை உடைத்துப் போட்டது. அடுத்த மழைக்கு காடர் குடி இருக்குமா என்ற கேள்வி எழவே, தார்பாய், மூங்கில் கொண்டு வாழ்வதற்கு தேவையான மிக அடிப்படையான குடில்களை தாய்முடி எஸ்டேட்டிற்கு அருகே அமைத்து கொண்டர் காடர் குடியினர்.
இந்த விவகாரம் வனத்துறைக்கு தெரிய வரவும், 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து அங்கு வசித்து வந்த 24 குடும்பத்தினரை அருகில் இருக்கும் தாய்முடி தோட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் மாற்று ஏற்பாடுகள் வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் மூலம் தங்க வைக்கப்பட்டனர். போதுமான அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள், சுத்தமான குடிநீர் என ஏதும் இல்லாமல் 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் 6 வீடுகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
அவர்களின் குடியிருப்பு இடம் மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும் இன்னும் மாற்று வாழ்விடம் வழங்க எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. தங்களின் மூதையார்கள் வாழ்ந்த தெப்பக்குள மேட்டில் குடி அமைக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று தெப்பக்குள மேட்டில் குடில் அமைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி தங்களின் கருத்துகளை முன்வைத்தனர் காடர் பழங்குடியினர்.
தங்களின் நிலங்களுக்கு பட்டா தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர், வருவாய் துறையின் இதற்கு அனுமதி அளித்த போதிலும் வனத்துறையினர் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இருப்பினும் தாய்முடி எஸ்டேட்டில் இருந்து மானம்பள்ளி வனச்சரகர் அலுவலகம் வரை நடந்து சென்று போராட்டத்தை அறவழியில் நடத்துவோம் என்று கூறி இருந்தனர். வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006ன் படி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு தெப்பக்குள மேட்டில் காடர் பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்கள்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தெப்பக்குள மேட்டில் குடியிருப்பு பகுதி உருவாக்கித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி வருவாய்த்துறை, வனத்துறை, நில அளவைத் துறையினர் மூலம் நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நிலம் அளவிடப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் தெப்பக்குள மேட்டில் வாழ்விடம் அமைப்பதற்கான ஒரு பணிகளும் நடைபெறவில்லை என்பதால் இன்று காந்தி ஜெயந்தியன்று காந்தியின் அகிம்சை முறையை கையாண்டு போராட்டத்தில் ஈட்பட்டுள்ளனர் கல்லாறு காடர் பழங்குடியினர்.