சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றும் ஜெயலலிதா தவிர்த்த மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தியதால், அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சுதாகரன் 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு, தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதாகிற்று.
இந்த நிலையில், இன்று 4 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனையை முடித்து, சிறையில் இருந்து சுதாகரன் விடுதலையானார். 2007 ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தான் சிறையில் இருந்ததாகவும், அதனை கணக்கில்கொண்டு தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென சுதாகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் அவர் இன்று முன்கூட்டியே விடுதலையானார். அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தண்டனைக்காலம் உள்ள நிலையில் அவர் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலையாகியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sudhakaran-released-from-jail-on-property-accumulation-case-356344/