முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சியால், நீதிமன்ற பணிக்கு சென்று கொண்டிருந்த நீதிபதியை தடுத்து நிறுத்தி 25 நிமிடங்கள் காக்க வைத்த காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் மறைந்த தமிழ் சினிமா நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அரசு நிகழ்ச்சியாக சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதால், அவர்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, காவல்துறை சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால், அப்பகுதி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக காலையில் பணிக்கு செல்பவர்கள் 25 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
அந்த நேரத்தில், அடையாறில் இருந்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்திற்கு பணிக்கு தான் 25 நிமிடம் தாமதமாக வந்ததாகவும் இதனால் தனது பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
எதன் அடிப்படையில் 25 நிமிடம் தடுத்து நிறுத்தினீர்கள், பொது ஊழியரான நீதிபதிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்று நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும்போது காவல்துறைகள் போகும்போதும் காலவல்துறைகள் இதே போலதான் தடுத்து நிறுத்துவார்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்க வேண்டும். நீதிபதிகள் பொது ஊழியர்கள். அவர்களை பணிசெய்ய விட வேண்டும். அவர்களை தேவையில்லாமல் தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காது என்று நம்புவதாக கருதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/high-court-judge-who-stopped-in-traffic-by-police-because-cm-stalin-event-chennai-hc-condemns-349847/