புதன், 2 பிப்ரவரி, 2022

மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 


மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த திட்டங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிதாக எந்த ரயில் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட இராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட 1 லட்சம் கோடி நிதியை ஒதுக்குவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எந்த வகையிலும் மாநில அரசுக்கு உதவாது என்றும் கூறியுள்ளார். ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட் மக்களைப்பற்றி சிந்திக்காத பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று இதனை அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

source https://news7tamil.live/central-budget-is-a-budget-that-does-not-think-about-the-people-says-chief-minister-mk-stalin.html