பிரதமர் மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை (இ.டி.) ஆகியவற்றை தவறாக பயன்படுத்துகிறார் என நாம் நம்பவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகப்படியான செயல்களுக்கு எதிராக திங்கள்கிழமை (செப்.19) தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தீர்மானத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, “மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகப்படியான செயல்களுக்கு பின்னால் பிரதமர் இருப்பதாக நான் நம்பவில்லை.
ஆனால் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருபகுதியினர் அதனை தங்களின் நலன்களுக்காக பயன்படுத்துகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய அமைப்புகளின் பக்கச்சார்பான செயல்பாட்டிற்கு எதிரானது” என்றார்.
இந்தத் தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “சிபிஐ மற்றும் இடிக்கு எதிரான இத்தகைய தீர்மானம்” சட்டமன்ற விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது” என்றார்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 189 பேரும் எதிராக 69 பேரும் வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/nakkeran-chief-reporter-and-camera-man-attack-kallakurichi-school-issue-press-club-condemns-512874/