31 8 2022
பில்கிஸ் பானு என்ற பெண் மூலம் பாலியல் வக்கிரங்கள் உட்பட பல துயரங்களை நாம் உணர முடியும். ஒரு மனிதனின் வேதனையை வேறு யாரும் இந்த அளவுக்கு சொல்லியிருக்கவும் முடியாது. ஒரு சில எளிய ஆனால் மனதைக் கவரும் வார்த்தைகளில் கோடிக்கணக்கான ஏழைகள், பாகுபாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் நிலைமையை சுருக்கமாகக் இவர் கூறினார்: “அச்சமின்றி வாழ்வதற்கான எனது உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள்”என்று அவர் கோரியிருந்தார்.
பில்கிஸ் பானுவின் சோகக்கதை
பில்கிஸ் பானுவின் துயரக் கதை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2002ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பில்கிஸ் பானு 21 வயதான ஒரு இளம் தாய். அவர் கர்ப்பமாகவும் இருந்தார். ஒரு கும்பல் அவளைத் தாக்கியது. அவளைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. மேலும் அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொன்றது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பில்கிஸ் பானு தன் கதையைச் சொன்னார். அவளைத் தாக்கியவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆகஸ்ட் 15, 2022 அன்று, மாநில அரசு ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்தது மற்றும் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் கால்களைத் தொட்டு வரவேற்றனர். இதில் ஒருவர் “அவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கொண்ட பிராமணர்கள் என்று கூறினார்.
பில்கிஸ் பானுவின் வழக்கு தொடர்பாக 10 பேர் கொண்ட குழு நிவாரணத்திற்கான விண்ணப்பத்தை அனுமதித்தது. ஏழு தனிப்பட்ட உறுப்பினர்களில் மூன்று பேர் மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள். ஐந்து பேர் பிஜேபியின் தீவிர உறுப்பினர்கள், இருவர் சிட்டிங் எம்எல்ஏக்கள்.இந்த சம்பவத்துக்காக 2002ல் இருந்து பாஜகவில் இருந்து யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. பில்கிஸ் பானு தனது குடும்பத்தினருடன் தனது வீட்டை விட்டு வெளியேறி யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு சென்றதாக கூறப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு குறித்து பாஜகவைச் சேர்ந்த யாரும் கவலை தெரிவிக்கவில்லை.
இந்த கருத்தின் சாராம்சம் தெளிவாக உள்ளது. அனைத்து இந்தியர்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள் அல்ல. சட்டங்களின் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் அல்ல. எல்லா இந்தியர்களும் பயமின்றி தங்கள் வாழ்க்கையை வாழ முடியாது. உண்மையில், அதிகமான இந்தியர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.
பத்திரிகை சார்ந்த ஊடகவியலாளர்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். வழக்கமான ‘பிரேக்கிங்’ செய்திகள் குறித்த ஸ்கிரிப்டைப் படிக்க ஓபி வேனில் விரைந்த ஒரு பத்திரிக்கையாளர் ஒரு மிக குளிரான டிசம்பர் மாத இரவில் இரவு சுமார் 10 மணியளவில் ஒரு அவசர செய்தியை வெளியிடும் படி கட்டாயப்படுத்தப்பட்டார். இந்தக் குளிர் இரவில் இதை செய்வது கடினம் என்று ஏன் பணிவாக மறுக்கவில்லை என்று அவரிடம் கேட்டேன். வயதான பெற்றோர் தன்னுடன் வசிப்பதாகவும், அவரது பிளாட்டுக்குரிய மாத தவனை (EMI) செலுத்த வேண்டியிருப்பதாகவும், அவர் மறுத்தால், அவர் வேலையை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். பல பத்திரிகையாளர்கள் என்னிடம் தங்கள் செய்தித்தாள்கள் மற்றும் சேனல்களின் விருப்பங்களை மறுத்தால் அவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும், தற்போதைய சூழ்நிலையில், இன்னொரு வேலையை கண்டு பிடிப்பது கடினம் என்றும் சொன்னார்கள். இதற்கு பல்வேறு புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலையிழப்புகள் உதாரணங்களாக உள்ளன.
அரசு விளம்பரங்கள் மர்மமான முறையில் நின்று விடுமோ என்ற அச்சத்தில் ஊடக உரிமையாளர்கள் வாழ்கின்றனர். தனியார் துறை விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர வரவு செலவுத் திட்டத்தில் திடீரென பணக்குறைப்பு செய்வார்கள். தமது நிறுவனம் நிர்வாகத்தையே வேறு யாரும் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சமும் பத்திரிகை அதிபர்கள் மத்தியில் உள்ளது. இதே போல, வங்கி நிர்வாகமும் அச்சத்தில் தான் உள்ளது. அதிக தொகைக்கு கடன் கேட்டால் நீங்கள் ஒப்புதல் தருவீர்களா என ஒரு வங்கி மேலாளரிடம் கேட்டேன். அவரோ நான் ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றன. இந்த நேரத்தில் நான் என்ன ரிஸ்க் எடுப்பது என என்னிடம் ரகசியமாக சொன்னார்.
இது தவிர அரசு அதிகாரிகளும் அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். மோடி அரசாங்கத்தின் முதல் ஆண்டில், அரசாங்கம் வெளிப்படையான கருத்துகளை வரவேற்கிறது என்ற கருத்தை நம்பி ஒரு அதிகாரி வெளிப்படையாக அரசின் திட்டம் எப்படி மோசமானது, பொருளாதாரத்துக்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என விளக்கினார். இதற்குப் பிறகு அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவமானத்தை தவிர்க்க வழி கண்டுபிடித்துள்ளனர். மிகச் சிலரே மத்திய அரசு பணியை விரும்பி செல்கின்றனர்.
அச்சத்தில் பொதுமக்கள்
பொது மக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் என அனைவருமே அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். பிரதமர் அலுவலகம் அல்லது கேபினட் செயலகத்தில் இருந்து தினமும் அறிவுறுத்தல்களைப் பெற்று, அந்த அறிவுறுத்தல்கள் படி அமைச்சர்களுக்கு கோப்புகளை வைப்பதன் மூலம் அமைச்சர்கள் தங்கள் செயலாளர்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். அமைச்சரவை செயலகம் எழுதி அனுப்பும் குறிப்புகளை அப்படியே ஏற்று அவற்றை அப்படியே அமைச்சரவைக்கு அனுப்பிவிடுகின்றனர். எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரம் முழுவதற்கோ தொடர் முடியும் வரையிலோ கூட சஸ்பெண்ட் செய்யப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் வெளியில் சொல்லவே பயப்படுகின்றனர்.
இதே நிலையில் தான் வர்த்தகர்களும் உள்ளனர். வியாபாரிகளும் ஒரு வித பயத்திலேயே உள்ளனர். சிபிஐ, அமலாகத்துறை மற்றும் வருமான வரித்துறைக்கு மட்டும் பயம் காட்டுவதில்லை இவர்கள். ஜிஎஸ்டி நிர்வாகம், டிஆர்ஐ, எஸ்எஃப்ஐஓ, செபி, சிசிஐ, என்ஐஏ மற்றும் என்சிபி போன்ற பிற ஏஜென்சிகளுக்கும் அஞ்சும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த சிறு குறு நடுத்தர தொழில் பிரிவுகள் (MSME) பொருளாதார சூழ்நிலைகளால் நிரந்தரமாக மூடப்படும் என்ற அச்சத்தில் உள்ளன.
குற்றச்செயல்கள், கும்பல் வன்முறைகள், காவல்துறையின் அத்துமீறல்கள் மற்றும் பொய் வழக்குகள் போன்றவற்றால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். குறிப்பாக பெண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், கார்டூனிஸ்ட்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கியமாக மாணவர்கள் நீட் (NEET), க்யூட் (CUET) மற்றும் பிற மையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல குறைபாடுகள் குறித்து அச்சத்தில் வாழ்கின்றனர் . யார் தேர்வு செய்யப்படுவார்கள், என்ன அளவுகோல்கள், கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாது. இது குறித்த எந்த கவனமான திட்டமும் அரசிடம் இல்லை.
ஏழைகள் தங்களுடைய வேலைகளை இழந்து, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை எதிர் கொண்டு அச்சத்தில் வாழ்கின்றனர் . பலர் இல்லாத வேலைகளைத் தேடுவதை நிறுத்திவிட்டனர். 2017 மற்றும் 2022 க்கு இடையில் 21 மில்லியன் பெண்கள் வேலை செய்வதை விட்டுவிட்டதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு சொல்கிறது.
குடிமக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்று உறுதியளிக்கும் அதிகாரமுள்ள ஒருவர் ஆட்சியில் இருப்பதை நான் விரும்புகிறேன். ஆனால், இன்று அப்படி யாரும் இன்று இந்தியாவில் இல்லை.
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-my-right-to-live-without-fear-502971/