சனி, 17 செப்டம்பர், 2022

மின்கட்டணம் பாக்கி உள்ளது’ மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபடும் கும்பல்.. ஜாக்கிரதை!

 ‘மின்கட்டணம் பாக்கி உள்ளது’ மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபடும் கும்பல்.. ஜாக்கிரதை!

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. என்சிஆர்பியின் தகவல்படி, நாடு முழுவதும் 4,047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2,160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1,194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1,093 ஓடிபி மோசடிகள் பதிவாகியுள்ளன.

தற்போது மற்றொரு மோசடி அரங்கேறி வருகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை. இந்த லிங்க் மூலம் உடனே ஆன்லைனில் கட்டணம் செலுத்துங்கள் என எஸ்எம்எஸ் வருகிறது. அந்த லிங்க்கை கிளிக் செய்தவுடன் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் இதில் சிக்குவதாக தெரிவிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் மின்சாரக் கட்டண மோசடி கும்பலை சைபர் கிரைம் அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் வரும் லிங்க்-கை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அதிகாரி போல் பேசி மோசடி

அந்த கும்பல் முதலில் சிம்கார்டு விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று பொதுமக்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றன. பாக்கி மின்கட்டணத்தை செலுத்துமாறு தகவல் அனுப்புகின்றன. அந்த மெசேஜில் “அன்பான நுகர்வோர், உங்களின் முந்தைய மாத பில் பாக்கி உள்ளது. மின் கட்டணம் செலுத்தப்படாததால் இன்று
இரவு உங்கள் மின்சாரம் நிறுத்தப்படும். கட்டணத்தைச் செலுத்த பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த லிங்க் கிளிக் செய்தால், டெலிகாலர் அல்லது ஒரு இணையதளப் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு பாக்கி கட்டண தொகையை செலுத்த கேட்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவுடன் பணம் எடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை சேமித்து வைத்திருந்தால் பெரிய தொகை மோசடி செய்யப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த டெலிகாலர்கள் BSES அதிகாரிகளாக தங்களை காட்டிக் கொண்டு வங்கி கணக்கு விவரங்களை கேட்டு மோசடி செய்கின்றனர்.

65 பேர் கைது

நாடு முழுவதும் மின் கட்டண மோசடி தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, மின்கட்டண மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றியதாக 65 பேரை டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர். இத்தகைய மோசடி சம்பவங்கள் பெரும்பாலானவை ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள ஜம்தாராவில் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். பல்வேறு வழிகளில் தனிநபரை ஏமாற்றுவதில் ஜம்தாரா கும்பல் கைதேர்ந்ததாக கூறப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/technology/beware-of-electricity-bill-scam-scammers-send-a-message-then-empty-bank-account-509086/