6 9 2022
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெறும்போது வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில், ’வியாபாரிகள் நலச்சங்கத்தின் 25வது வெள்ளி விழா’ குரோம்பேட்டையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்கிரமராஜா, அரிசி, பருப்பு, பால், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும், மாநில அரசின் செஸ் வரி விதிப்பை திரும்பபெறவண்டும் எனவும் இது சம்பந்தமாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றார்.
பிறகு, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வணிகத்திற்காக பல்வேறு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரும் நிறுவனங்களான ஜியோ, அம்பானி போன்றோர்களும் சாமானியர்களின் சிறு வணிகத்தை சீர்குலைக்கும் வகையில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக சிறப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். ஜி.எஸ்.டி-யை திரும்பபெறவில்லை என்றால் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெறும்போது பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
source https://news7tamil.live/gst-meeting-in-tamil-nadu-there-will-be-a-hunger-strike-wickramaraja.html