உத்தரப் பிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் மூன்று நாள் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போதுதான், கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமஷ் சக்சேனாவை மாநில அரசு சஸ்பென்டு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா எம்.பி., பிரியங்கா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “விளையாட்டு வீரர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இது அவமானகரமானது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அகிலேஷ் யாதவ், “விளையாட்டு வீரர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து நீதித்துறை நடுவர் விசாரிக்க வேண்டும். மூன்று நாள்களில் அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/up-govt-suspends-saharanpur-sports-officer-over-reports-of-food-kept-inside-stadium-toilet-513506/