9 1 2023
தமிழக ஆளுநரை கண்டித்து வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது
தமிழக ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.
அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், தமிழர் பண்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் சார்ந்தவராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் அரசியல் நாகரிகம் பண்பாடு இல்லாமல் சட்டமன்றத்தில் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் எந்த ஆளுநரும் செயல்படாத வகையில் இன்று தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளார்.
அறிக்கையை முழுமையாக படிக்காமல், தமிழ்நாடு என்று படிக்காமல் தமிழகம் என்று படித்துள்ளார். அரசு தயாரித்த முழுமையாக அறிக்கையை படிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார்.
மாநில சுயாட்சி, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார். ஆளுநர் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறை. இது அமைச்சரவையை அவமானபடுத்தும் செயல். இதில் முதலமைச்சரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆளுநரை கண்டிக்க மறுக்கிறார். மத்திய அரசின் ஊழல் எல்லா இடங்களிலும் நடக்கிறது. திமுக ஊழல் செய்தால் கண்டிப்பாக கூட்டணி கட்சியாக உள்ள நாங்கள் எதிர்ப்போம். பாஜக அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினார் என்பது பற்றி சொல்ல முடியாமல் தமிழக அரசு துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதில் அவருக்கு எந்த தகுதியும் இல்லை .
மேலும் தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை விரைந்து நிறைவேற்றினால் நல்லதாக இருக்கும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
source https://news7tamil.live/governors-house-siege-protest-on-20th-january-marchist-communist-party-declaration.html