வியாழன், 9 ஏப்ரல், 2026

திருப்பரங்குன்றம் வழக்கு விசாரிக்க தடை - உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

 8 4 2026

GR Swaminathan HC

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் உள்ளிட்ட சிலரை மலைக்குச் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தடைக்கான காரணங்கள்:

தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி ஒரு பொது நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து அதிருப்தி வெளியிட்டதாகவும், அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதாகப் பகிரங்கமாகக் கூறியிருப்பதால், இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது.

நேற்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த விவகாரத்தை ஒரு அரசியல் மேடையாக மாற்றக் கூடாது" என்று கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ள நிலையில், தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மலை அளவீடு குறித்து மற்றொரு உத்தரவு:

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் உதவியுடன் மே மாதத்திற்குள் மலையை முழுமையாக அளவீடு செய்ய மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/hc-madurai-bench-stays-justice-gr-swaminathan-contempt-proceedings-thiruparankundram-deepam-case-11703616