தமிழ் மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கத் தயாரா?
/indian-express-tamil/media/media_files/2026/04/07/stalin-z-2026-04-07-05-22-06.jpg)
நிதி ஒதுக்கீட்டில் இழைக்கப்படும் அநீதி, மும்மொழிக் கொள்கை மற்றும் சிறுபான்மை அமைப்புகளைப் பாதிக்கும் எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்திருத்தம் ஆகிய விவகாரங்களை முன்வைத்து பா.ஜ,க மற்றும் அ.தி.மு.க என இரு தரப்பையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காகத் தமிழ்நாட்டிற்குப் படையெடுக்கும் ஒன்றிய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நிதி ஒதுக்கீட்டில் இழைக்கப்படும் அநீதி, மும்மொழிக் கொள்கை மற்றும் சிறுபான்மை அமைப்புகளைப் பாதிக்கும் எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்திருத்தம் ஆகிய விவகாரங்களை முன்வைத்து பாஜக மற்றும் அதிமுக என இரு தரப்பையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுப் பரப்புரை செய்து வருகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு வரும் ஒன்றிய அமைச்சர்களும், பாஜக முதல்வர்களும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "தமிழ் மண்ணில் நின்றுகொண்டு, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அமல்படுத்துவோம் என்று சொல்லி பாஜகவினரால் வாக்குச் சேகரிக்க முடியுமா?" என அவர் நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.
இரண்டாவதாக, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், பாஜக ஆளும் 'செல்லக்குழந்தை' மாநிலங்களுக்குத் தரப்படும் நிதிக்கும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய முறையான நிதியை வழங்காமல் வஞ்சித்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் டெல்லியில் இருந்து தலைவர்கள் படையெடுப்பது ஏன் என்றும் அவர் தனது பதிவில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்துப் பேசிய அவர், கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை அமைப்புகளைக் குறிவைத்து, அவற்றின் சொத்துகளைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை (எஃப்.சி.ஆர்.ஏ) சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு முழுமையாகத் திரும்பப் பெறுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்வாக ரீதியான வரம்பு மீறலுக்கு வழிவகுக்கும் இத்தகைய சட்டங்கள் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும் எனப் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதை அவர் தனது கேள்வியில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
இறுதியாக அதிமுகவையும் சாடிய முதல்வர், "இவற்றுக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது டெல்லி ஓனர்களிடம் பதில் பெற்றுத் தர முடியுமா?" எனக் கிண்டல் செய்துள்ளார். கண்ணியமற்ற அவதூறுகளைப் பரப்புவதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை பாஜக எப்போது பேசும் என வினவியுள்ள அவர், தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் வந்தாலும் தமிழ்நாடு தலைகுனியாது என்றும், உரிமைக்காகப் போராடி இறுதிவரை வெல்லும் என்றும் தனது செய்தியில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.





