ஈரானை ஒரே இரவில் முடித்துவிடுவோம்: ஓபனாக மிரட்டல்
/indian-express-tamil/media/media_files/2026/04/06/trump-iran-can-be-taken-out-in-one-night-might-be-tuesday-night-hormuz-ceasefire-proposal-tamil-news-2026-04-06-23-25-58.jpg)
"ஒட்டுமொத்த நாடும் ஒரே இரவில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த இரவு நாளை இரவாக இருக்கலாம்." என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் 1900-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உட்பட பல நாடுகளில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஒருபுறம் ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினாலும், மறுபுறம் அந்நாட்டுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் தொனியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார். போர் பதற்றத்தை தணிக்க, டிரம்ப் 15 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். ஆனால், ஈரான் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் அவகாசம் கொடுத்திருந்தார். இரண்டு முறை இதை நீட்டித்தார். அதன்படி, இன்று மாலையுடன் இது முடிவடைவதாக இருந்தது. மேலும், 24 மணி நேரத்துக்கு அவகாசத்தை நீட்டிப்பதாக டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் கூறியிருந்தார். இதனை ஈரான் கிண்டல் செய்திருந்தது.
மேலும், மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், 45 நாள் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட வரைவு திட்டம் அமெரிக்கா மற்றும் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. இந்நிலையில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரர் பாராசூட்டில் குதித்து தப்பித்தார். அவரை அமெரிக்க விமானப்படைகள் பாதுகாப்பாக மீட்டன.
இந்நிலையில், ஒட்டுமொத்த நாடே ஒரு இரவில் அழித்து ஒழிக்கப்படக்கூடும் என்றும், அந்த இரவு ஒரு வேளை நாளை இரவாகக்கூட இருக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இது பற்றி டிரம்ப் பேசுகையில், 'ஒட்டுமொத்த நாடும் ஒரே இரவில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த இரவு நாளை இரவாக இருக்கலாம். ஈரானில் சிக்கிய அமெரிக்க ராணுவ வீரரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம்.
ராணுவம் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரியதும், மிகவும் சிக்கலானதுமான பதற்றம் நிறைந்த தேடுதல் வேட்டையின் வெற்றியை கொண்டாட இங்கு நாம் கூடியிருக்கிறோம். ஒரு வீரரை மீட்க 200 வீரர்கள் அனுப்பப்படுவது எனுபது எளிதில் முடியாத விஷயம். வழக்கமாக யாரும் அவ்வளவு எளிதில் செய்ய துணிய மாட்டார்கள். இந்த பணியில் எங்களுக்கு பலரும் சிறந்த மனிதர்கள் உதவினர். இந்தப் பணியில் ஈடுபட்டது எங்களுக்கு கிடைத்த பெருமை. இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு. வரலாற்றில் இடம்பெறக்கூடிய மீட்பு நடவடிக்கையாகும்." என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தள பதிவில், நாளை செவ்வாய்க்கிழமையுடன் ஈரானுக்கான காலக்கெடு முடிகிறது என்றும், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் மின் நிலையங்களே இருக்காது," என்று மிரட்டல் விடுத்திருந்தார்.





