வியாழன், 2 ஏப்ரல், 2026

குவாண்டம் உலகில் புதிய புரட்சி

 குவாண்டம் மற்றும் மின்னணுத் துறையில் உலக நாடுகளுக்குப் போட்டியாக, ஆய்வகங்களில் வளர்க்கப்படும் வைரங்களைக் கொண்டு சென்னை ஐ.ஐ.டி புதிய புரட்சியைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த ஆராய்ச்சி, இந்தியாவைச் செயற்கை வைர உற்பத்தியில் வல்லரசாக மாற்றுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் போட்டோனிக்ஸ் துறைகளில் புதிய மைல்கல்லை எட்டும் நோக்கில், ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரங்களைக் (Lab-Grown Diamonds) கொண்டு சென்னை ஐ.ஐ.டி ஆய்வுக்குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படும் இந்த ஆய்வுக்குழு, செயற்கை வைர உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னிலைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இயற்கை வைரங்களுக்கு இணையான வேதியியல் மற்றும் ஒளியியல் பண்புகளைக் கொண்ட இந்தச் செயற்கை வைரங்கள், ஆபரணத் தேவைகளைத் தாண்டி மின்னுணு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த உள்நாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு மூலம், ரத்தினத் தரம் மற்றும் மின்னணு தரத்திலான வைரங்களை உருவாக்குவதில் இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், பொருளாதார வளர்ச்சியும் கணிசமாக உயரும்.

இது குறித்து ஆய்வுக்குழுவின் முதன்மை ஆய்வாளர் ராமச்சந்திர ராவ் கூறுகையில், "செயற்கை வைரத் தொழில்நுட்பத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய தேசிய மையத்தை அமைப்பதே எங்களது முதன்மை இலக்கு. இதன் மூலம் வைரங்களை வளர்க்கும் செயல்முறைகளை மேம்படுத்த முடிவதுடன், இத்துறைக்குத் தேவையான நிபுணத்துவ மனித வளத்தை உருவாக்கப் பயிற்சி மற்றும் சிறப்புப் பாடத்திட்டங்களையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்," எனத் தெரிவித்தார். உலகத் தரம் வாய்ந்த இந்த ஆராய்ச்சி, இந்தியாவைத் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என சென்னை ஐ.ஐ.டி தனது செய்திக் குறிப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-iit-lab-grown-diamond-research-quantum-technology-india-11444784