வியாழன், 2 ஏப்ரல், 2026

50 அமைப்புகளுடன் மெகா கூட்டணி

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க 35-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து "தமிழர் வாழ்வுரிமை கூட்டணி" என்ற புதிய மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

இந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற பெரிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடும் போராளிகளின் கூட்டணியாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, த.வா.க கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வேல்முருகன் அறிவித்திருந்தார். ஆனால், அவர் போட்டியிடாவிட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதால், தான் போட்டியிடுவது குறித்து கட்சி மற்றும் கூட்டணிக் குழு ஆலோசித்து விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என்று கூறினார்.

தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பிற கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் இலவசங்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு மட்டுமே இலவசங்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மற்ற பெரிய கட்சிகளைப் போல கூட்டணிக் கட்சிகளைத் தனது கட்சியின் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி வற்புறுத்தப் போவதில்லை என்றும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தங்களது சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட ஜனநாயக ரீதியாக அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியலைத் தவிர்த்து, கடந்த 15 ஆண்டுகளாக மண், மொழி மற்றும் மக்களுக்காக நடத்திய போராட்டங்களையே முதலீடாக வைத்து மக்களிடம் வாக்கு கேட்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள கேமரா சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ள நிலையில், அவை மிக விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2 4 2026 


source https://tamil.indianexpress.com/tamilnadu/velmurugan-announces-mega-alliance-with-35-parties-and-50-organizations-for-2026-tn-elections-11444392