புதன், 1 ஏப்ரல், 2026

வல்லரசு அந்தஸ்து என்பது ஆயுதங்களில் உருவாவது இல்லை. அது மற்ற நாடுகள் தங்கள் மீது வைத்திருக்கும் 'பயத்திலும், நம்பிக்கையிலும்' இருக்கிறது.

 வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான எழுதப்படாத விதி உண்டு. "ஒரு வல்லரசு தனக்கு வயதாகிவிட்டது என்பதைத் தானே உணராமல், ஒரு சிறிய நாட்டிடம் தேவையில்லாமல் மல்லுக்கட்டித் தனது அஸ்திவாரத்தை உடைத்துக்கொள்ளும்!"



அன்று (1956-ல்) பிரிட்டனுக்கு அது 'சுயஸ் கால்வாய்' (Suez Canal) ரூபத்தில் வந்தது. இன்று (2026-ல்) அமெரிக்காவுக்கு அது 'ஹூர்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) ரூபத்தில் வந்திருக்கிறது!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகும் "சூரியன் மறையாத சாம்ராஜ்யம் நாங்கள்தான்" என்று பிரிட்டன் ஒரு போதையில் மிதந்துகொண்டிருந்தது. அப்போதுதான் எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், "சுயஸ் கால்வாய் இனி எகிப்துக்கே சொந்தம்" என்று தேசியமயமாக்கினார். கோபமடைந்த பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆக்கிரமிப்பு தேசத்துஅ சேர்ந்து எகிப்து மீது படையெடுத்தது. ஆனால், உலகமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் அங்கே நடந்தது. அன்றைய புதிய வல்லரசான அமெரிக்கா (அதிபர் ஐசனோவர்), "போரை நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்" என்று மிரட்டியது. எண்ணெய் விநியோகம் தடைபட்டது, பவுண்ட் மதிப்பு பாதாளத்திற்குச் சென்றது. வேறு வழியின்றி, அசிங்கப்பட்டுக்கொண்டு பிரிட்டன் படைகளைத் திரும்பப் பெற்றது. அந்த நொடியில்தான் பிரிட்டன் தனது 'உலக வல்லரசு' (Global Superpower) என்ற கிரீடத்தை கழற்றி, அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் தலையில் வைத்தது!

அன்று சுயஸ் கால்வாய் பிரிட்டனுக்குச் செய்ததை, இன்று ஈரான் ஹூர்முஸ் ஜலசந்தி மூலமாக அமெரிக்காவுக்குச் செய்துகொண்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு தேசத்தைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா நேரடியாகக் களத்தில் குதித்தவுடன், ஈரான் தனது துருப்புச் சீட்டை இறக்கியது. ஹூர்முஸ் ஜலசந்தி மூடல்! உலகின் 20-ல் இருந்து 30 சதவீத கச்சா எண்ணெய் செல்லும் ஒற்றைக் குழாய் இதுதான். இதை அடைத்துவிட்டு, இன்று பாரசீக வளைகுடாவில் ஈரான் தன் இஷ்டத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கிறது. "என் பேச்சைக் கேட்டால் கப்பல் போகலாம், இல்லையென்றால் கடலில்தான் மூழ்க வேண்டும்" என்ற ஈரானின் பகிரங்க மிரட்டலுக்கு முன்னால், அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) படைகள் கையறு நிலையில் நிற்கின்றன.

அமெரிக்காவுக்கு இன்று விழுந்திருக்கும் மிகப்பெரிய அடி இதுதான். உக்ரைன் போரிலேயே பொருளாதார ரீதியாகத் தளர்ந்துபோன ஐரோப்பிய நாடுகள், "மத்தியக் கிழக்கில் நடக்கும் போருக்கு நாங்கள் வரமாட்டோம், எங்கள் பொருளாதாரம் தாங்காது" என்று பின்வாங்கிவிட்டன. ஒருகாலத்தில் அமெரிக்காவின் கண்ணசைவுக்கு ஆடிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இன்று 'சைலண்ட் மோடில்' இருக்கின்றன. காரணம்? ஈரானின் ஏவுகணைகள் தங்களின் எண்ணெய் வயல்களையும், டுபாய் போன்ற சொகுசு நகரங்களையும் சுக்குநூறாக்கிவிடும் என்ற பயம்! அமெரிக்காவுக்காகத் தங்கள் நாட்டைப் பலிகொடுக்க அவர்கள் இன்று தயாராக இல்லை.

எப்படி சுயஸ் நெருக்கடி பிரிட்டனின் 'பவுண்ட்' நாணயத்தின் ஆதிக்கத்தை முடித்துவைத்தோ, அதேபோல இந்த ஹார்முஸ் நெருக்கடி அமெரிக்காவின் 'பெட்ரோடாலர்' (Petrodollar) ஆதிக்கத்தின் சவப்பெட்டிக்கு அறையப்படும் இறுதி ஆணியாக மாறப்போகிறது என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர். பல மில்லியன் டாலர் ஏவுகணைகளை வீசி, ஈரானின் சில ஆயிரம் டாலர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதிலேயே அமெரிக்காவின் பொருளாதாரம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. எண்ணெய் விலையின் கிடுகிடு உயர்வு, அமெரிக்காவிற்குள் பணவீக்கத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். எல்லாவற்றுக்கும் மேலாக, "அமெரிக்காவை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்" என்பதை ஆக்கிரமிப்பு தேசத்தின் தற்போதைய நிலையும், அரபு நாடுகளின் மௌனமும் உலகிற்கு உணர்த்திவிட்டன.

வல்லரசு அந்தஸ்து என்பது ஆயுதங்களில் உருவாவது இல்லை. அது மற்ற நாடுகள் தங்கள் மீது வைத்திருக்கும் 'பயத்திலும், நம்பிக்கையிலும்' இருக்கிறது. சுயஸ் கால்வாயில் பிரிட்டன் தன் 'பயமுறுத்தும் திறனை' இழந்தது. இன்று ஹூர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தனது 'பயமுறுத்தும் திறனையும், கூட்டாளிகளின் நம்பிக்கையையும்' சேர்த்தே இழந்து நிற்கிறது. ஆம், ஒற்றைத் துருவ வல்லரசு (Unipolar Uncontested Superpower) என்ற அமெரிக்காவின் சகாப்தம், ஹூர்முஸின் சுழல்களில் மூழ்கத் தொடங்கிவிட்டது. புதிய உலக ஒழுங்கு (Multipolar World) பிறந்துவிட்டது எனலாம்.

Abdullah Ibnu Naseer