செவ்வாய், 22 மார்ச், 2016

மூலிகை மந்திரம் வல்லாரை


ht4371
ஞாபக சக்தி என்றதுமே நம் நினைவில் வரக்கூடியது வல்லாரை. மூளையின் செயல்பாட்டுக்கு அதிகம் துணையாகிறது என்பதன்  அடையாளமாக, இதன் இலைகளே மனித மூளையின் உருவத்தைப் பெற்றிருக்கும். வல்லாரையின் பூக்கள் வெண்மை அல்லது  சிவந்த நீல நிறம் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மலைப் பிரதேசங்களில் அதிகமாக வளர்கிறது. 

உலர்ந்த பகுதிகளிலும் வளர்வதுண்டு. இது ஒரு பூண்டு வகைத் தாவரம் ஆகும். Centella asiatica என்பது வல்லாரையின்  தாவரப்பெயர் ஆகும். Indian pennywort என்று இதை ஆங்கிலமொழியில் குறிப்பது வழக்கம்.  மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த உதவும் என்பதால் கல்விக்கடவுளான சரஸ்வதியின் பெயரால் ‘சரஸ்வதி கீரை’ என்றும் அழைக்கிறார்கள்.

வல்லாரையின் மருத்துவச்செயல்பாடுகள் சூழ்நிலைகளுக்கேற்ப மனோநிலையை மாற்றிக் கொள்ளும் பலத்தைத் தரும் சிறப்பு  கொண்டதாக வல்லாரை விளங்குகிறது. மனோநிலையை மாற்றும் Adaptogens என்ற மருத்துவ வேதிப்பொருட்கள்  வல்லாரையில் மிகுதியாக அடங்கியதே இதற்குக் காரணம். இதனால் மன உளைச்சலை வெல்லும்  உடல்நிலை மாற்றத்தைத்  தருவதாக வல்லாரை அமைகிறது. 

பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, வெப்பம், குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றங்களாக இருந்தாலும் சரி… அதற்கு ஏற்ப  நம்மைத் தேற்றிக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வல்லாரை உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலங்களுக்கு அமைதி  தருவதுடன், ரத்தநாளங்களில் அடைப்புகள் வராமலும் ரத்த ஓட்டம் தடைபடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் வல்லாரை  மருந்தாகிறது. பல்வேறு நோய்களைத் தீர்த்து சுகம் தரும் ஆன்டிபயாட்டிக் பணியையும் திறம்பட செய்கிறது வல்லாரை. 

உடலில் சேர்ந்து துன்பம் தரக்கூடிய நச்சுப் பொருட்களை நீக்கி சுகம் தருகிறது. மலமிளக்கியாக விளங்குகிறது. சிறுநீரை
சீராக வெளித்தள்ளுவதற்கும் உதவுகிறது. தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டிச் சீர் செய்கிறது. குறைவான மாதவிலக்கு எனும்  குறைபாட்டை நீக்கி முறையாக நடைபெறும்படி தூண்டிவிடுகிறது.

இந்திய மருத்துவத்தில் வல்லாரையை மூளைக்கு பலம் தருகிற ஊட்டச்சத்துப் பொருளாகவும், ஞாபக சக்தியைத் தூண்டி  அறிவை அபிவிருத்தி செய்யவும், மனக்குழப்பங்கள், மனஅழுத்தம் எனப்படுகிற மனம் சார்ந்த அத்தனைக் கோளாறுகளையும்  களையவும், உடல்சோர்வைப் போக்கிப் புத்துணர்வு ஏற்படுத்தவும், உடலின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் சரும நோய்களைத்  துரத்தவும், குஷ்டநோயைக் குணப்படுத்தவும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

‘அக்கரநோய் மாறும் அகலும் வயிற்றிழிவு
தக்கரத்தக் கடுப்புத் தானேகும் –
பக்கத்தில்
எல்லாரை யும்மருந்தென் றேயுரைத்து
நன்மனையுள்
வல்லாரை யைவளர்த்து வை’


– இது வல்லாரை பற்றிய தேரையர் என்கிற சித்தரின் குணப்பாடம்.நாவில் புண்களும் கொப்புளங்களும் தோன்றி எரிச்சலை  ஊட்டுகிற வாய்ப்புண் வல்லாரையால் குணமாகும். கடுமையான வயிற்றுப்போக்கு காணாமல் போகும். வயிற்றை விட்டுவிட்டு  வலிக்கச் செய்கிற பெருங்கழிச்சல் விட்டுச் செல்லும். ரத்தத்தோடும் வயிற்றுவலியோடும் வெளியாகிற ரத்த, சீதபேதிகளும்  விலகிப் போகும். 

வல்லாரையால் கிடைக்கும் இந்த பலன்கள் நம் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால்,  அவர்களிடமும் வல்லாரையின் மகத்துவத்தைச் சொல்லி ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கச் சொல்ல வேண்டும்  என்று மேற்கண்ட பாடலில் தேரையர் பரிந்துரைக்கிறார். 

நவீன மருத்துவத்தில்வல்லாரையின் பங்கு உடல் தேற்றும் டானிக்காகவும், வெப்பமுண்டாக்கி உள்ளுறுப்புகளைத் தூண்டிச்  சீராகச் செயல்படச் செய்யவும் வல்லாரை உதவுகிறது என்று தெரிவிக்கிறது நவீன மருத்துவம். அறுவை சிகிச்சை, விபத்துகளால்  ஏற்பட்ட கடுமையான புண்களையும் குணப்படுத்துகிறது வல்லாரை. தீ விபத்தால் ஏற்பட்ட இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்
நிலைப் புண்களையும் விரைந்து ஆற்றும் வலிமை வாய்ந்தது. 

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கிற ரத்த ஓட்டக்குறைபாடு அதாவது, காலுக்குச் சென்ற ரத்தம்  மீண்டும் சுழற்சியாக மாறாமல் தேக்கமுற்று வீக்கத்தையும் புண்களையும் உண்டாக்குகிற துன்பத்தையும் துடைக்கவல்ல ஓர்  உன்னத சக்தியாக வல்லாரை விளங்குகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வல்லாரை இலையை கீரையாகவோ அல்லது நீரிலிட்டுத் தீநீராகவோ காய்ச்சிக் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் தணிகிறது.  வல்லாரையிலிருக்கும் Asiaticoside தொழுநோய் உட்பட பல சரும நோய்களையும் போக்குவதாக இருக்கிறது.  ஏசியாடிகோஸைட் எனும் வேதிப்பொருள் கல்லீரல், நுரையீரல், நரம்பு முடிச்சுகள் மற்றும் மண்ணீரல் ஆகிய பகுதிகளில்  ஏற்படும் புண்களையும் கட்டிகளையும் ஆற்றவல்லதாக விளங்குகிறது. மேலும் காசநோய்த் தீர்ப்பான் ஆகவும், சர்க்கரை நோய்  தடுப்பானாகவும் பயன் தருகிறது. வல்லாரையில் உள்ள ஏசியாடிகோஸைட் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, மொத்தக் கொழுப்பு,  டிரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றையும் குறைக்கவல்லது.வல்லாரை மருந்தாகும் விதம் 

வல்லாரை இலையை ஒரு பிடி எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து குடிப்பதால் சிறுநீர்த்தாரையில் உண்டான தொற்றுகள்  குணமாகும்.வல்லாரைக் கீரையை சாறு எடுத்து அதை வடிகட்டாமல் அப்படியே அரை டம்ளர் குடித்தால் பால்வினை நோய்கள்  குணமாகும்.

வல்லாரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு, காலை, மாலை என  இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கீரிப்பூச்சிகள், நாடாப்புழுக்கள், மண்புழுக்கள் ஆகியன  வெளியேறுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

அன்றாடம் வல்லாரைக் கீரைச் சாற்றை வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வருவதால் விரைவாதம்,  நெறிக்கட்டிகள் ஆகியன குணமாகும்.வல்லாரை இலைக்கு சம அளவாக துளசி இலை, மிளகு இவற்றைச் சேர்த்து 100 மி.கி.  அளவுள்ள மாத்திரைகளாக உருட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டுவேளை சாப்பிட்டு வருவதால் மலேரியா காய்ச்சல்,  யானைக்கால் காய்ச்சல் ஆகியவற்றோடு இன்னபிற காய்ச்சல்களும் குணமாகும்.

வல்லாரை இலைகளை ஐந்தாறு எடுத்து, அதனுடன் ஐந்து மிளகு, ஒரு பெரிய பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து காலையில்  மட்டும் வெறும் வயிற்றில் உண்டு, பின் பத்தியமாக பகலில் மோர் சாதம் சாப்பிட்டு வர வயிற்றுப்புண்கள், உடலின் வெளிப்பக்க  புண்கள் ஆகியன குணமாகும். இதை ஒரு மண்டலம் கொடுப்பது உகந்தது.

வல்லாரை இலைப்பொடியை 150 மி.கி. அளவு வரை எடுத்து தினம் ஒன்றுக்கு மும்முறை தேனுடன் கலந்து உள்ளுக்குக்  கொடுத்து அத்துடன் மேலுக்கும் வல்லாரைப் பொடியைத் தூவி வருவதால் அல்லது பசுமையான இலையையே அரைத்து  மேற்பூச்சாகவோ அல்லது தட்டாகவோ போட்டு வருவதால் நீண்ட நாட்களாக இருந்து தொல்லை தந்து வந்த ஆறாப்புண்களும்  விரைவில் ஆறிப் போகும்.

வல்லாரைப் பொடி 100 மி.கி. அளவோடு வெந்தயப் பொடி, அரிசித் திப்பிலி, மஞ்சள் தூள் (கொம்பு மஞ்சள்) சேர்த்து சம அளவு  இரவு தூங்கச் செல்லும் முன் படிக்கிற குழந்தைகளுக்கு 500 மி.கி. வரை பாலுடன் சேர்த்துக் கொடுத்தால் ஞாபக சக்தி  மிகுதியாகும். 

பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மேற்சொன்ன முறையில் வல்லாரையைக் கொடுப்பதால் இதன் பாதிப்பை  குணமாக்கலாம். ஆன்மிக விஞ்ஞானியாக விளங்கிய வள்ளலார், ‘வல்லாரையைக் கண்டேன் வாதத்தை வென்றேன்’ என்று  சொல்லியிருப்பது இதற்குப் பெரும் சாட்சியாகும்.
(மூலிகை அறிவோம்!)