எச்சிலை வைத்து ஒருவரின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என, இங்கிலாந்தை சேர்ந்த பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பார்பரா ஸ்டூவர்ட் கண்டுபிடித்துள்ளார்..
CANCER, BP என நமது ஆயுட்காலத்தை குறைக்கும் நோய்களுக்கு ஒன்றும் இந்த உலகில் பஞ்சமில்லை. நோய் வந்த பிறகு மருந்து, மாத்திரை என அல்லோலப்படுகிறோம். ஒரு வேளை இந்த நோய்கள், நமக்கு வருவதற்கு முன் கூட்டியே அறிந்து கொண்டால் எப்படி இருக்கும்?
அப்படிபட்ட ஒரு ஆராய்ச்சியில் தான் வெற்றியை சுவைத்துள்ளார், இங்கிலாந்தை சேர்ந்த பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பார்பரா ஸ்டூவர்ட் .
ஒருவரின் உமிழ்நீரில் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம், பின்னாளில் அந்த நபருக்கு வரவிருக்கும் நோய்களை கண்டறியக்கூடிய முறையை பார்பரா கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஒருவரின் உணவுப்பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை ஒருவர் விடாமல் கடைபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு, பின்னாளில் வரவிருக்கும் ரத்த அழுத்த நோய், இருதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளை வரவிடாமல் தடுத்துவிடலாம் என பார்பரா கூறுகிறார்.
நாம் வாழும் சூழல், முந்தைய உணவு பழக்கவழக்கங்கள், நம் பெற்றோர்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ள மரபணு குறிப்புக்கள் - இவை தான் நமக்கு எந்தெந்த உணவுகள் பிடிக்கும், பிடிக்காது என்பதை தீர்மாணிக்கின்றன. ஒருவருக்கு இட்லி பிடிக்கலாம், மற்றொருவருக்கு பிரியாணி பிடிக்கலாம், பலருக்கு மாமிச உணவுகளே பிடிக்காமல் கூட இருக்கலாம். பார்பராவின் ஆராய்ச்சி மூலம் ஒருவருக்கு தேவையான personalised nutrition என்று சொல்லப்படும் தனிப்பட்ட ஊட்டச்சத்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இதன் மூலம் நம் நாவிற்கு ஏற்ற சுவையான உணவுகளையும், நமக்கு வரவிருக்கும் நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவுகளையும் தேர்தெடுத்த கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சிலை ஆராய்ச்சி செய்து, எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்திருப்பது வரமாகவே பார்க்கப்படுகிறது. தங்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை அனைத்து மக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில், அனைவருக்கும் இச்சேவை கிடைத்தால், எச்சில் தான் எதிர்காலம்’ என்ற கூற்று மிகையாகாது.
credit ns7.tv