டமாஸ்கஸ்,
சிரியாவில் திடீர் திருப்பமாக ரஷிய படைகள் வாபஸ் ஆகின்றன.
உள்நாட்டுப்போர்
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் 15–ந் தேதி முதல் கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வந்தனர்.
இந்த உள்நாட்டுப்போர் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்து வந்தது. இதன் காரணமாக அந்த நாட்டில் 5 ஆண்டுகளில் சுமார் 2½ லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டனர். இன்னும் பல லட்சம் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தனர்.
சண்டை நிறுத்தம்
இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக வல்லரசு நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அங்கு கடந்த மாதம் 27–ந் தேதி முதல் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே இந்த சண்டை நிறுத்தம் மீறப்பட்டாலும், பொதுவாக அமைதி நிலவுகிறது.
சிரியாவில் நிரந்தர சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் சமரச பேச்சு வார்த்தை ஐ.நா. சபையின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் (14–ந் தேதி) தொடங்கி உள்ளது. நேற்று 2–வது நாளாக பேச்சு வார்த்தை நடந்தது.
ரஷிய படைகள் வாபஸ்
இந்த நிலையில் சிரிய விவகாரம் குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது ராணுவ மந்திரியுடனும், வெளியுறவு மந்திரியுடனும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போது சிரியாவில் இருந்து ரஷிய படைகளை விலக்கிக்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இது சிரியா விவகாரத்தில் திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை ராணுவ மந்திரி செர்கெய் ஷோய்கு வெளியிட்டார்.
ரஷியா சாதித்தது என்ன?
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் நெருங்கிய கூட்டாளியாக ரஷியா இருந்து வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதற்காக ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக புதின் கூறி வந்தாலும், அதிபர் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களை ஒடுக்கத்தான் ரஷிய படைகள் ஆர்வம் காட்டி வந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
சிரியாவில் ரஷிய விமானங்கள் 9 ஆயிரம் முறை பறந்துள்ளன. 209 எண்ணெய் ஆலைகளை துவம்சம் செய்துள்ளன. 400 குடியேற்றங்களை சிரிய படைகள் மீட்பதற்கு ரஷிய படைகள் உதவி செய்துள்ளன. சுமார் 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு பகுதியை சிரியா மீண்டும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ரஷியா துணை நின்றுள்ளது.
புறப்பட்டன
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் கலந்து பேசித்தான் அங்கிருந்து படைகளை திரும்பப்பெற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முடிவு எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
படைகள் வாபஸ் என்ற புதின் முடிவை அடுத்து சிரியாவில் உள்ள ரஷிய போர் விமானங்களில் முதல் அணி எரிபொருள் நிரப்பி, தளவாடங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.
எஸ்யு–24 ரக விமானங்கள், எஸ்யு–25 ரக தாக்குதல் விமானங்கள், எஸ்யு 34 தாக்குதல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நாடு திரும்புவதாக ரஷிய டி.வி. சேனல்கள் கூறின.
ரஷியாவின் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளன.