உயிர் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது ஆக்ஸிஜன். அத்தகைய ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வது ரத்தமாகும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம் தான் ஹீமோகுளோபின். அதிலும் இரத்த சிவப்பணுக்களை சரியாக பராமரிக்க வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை உருவாகி, பல்வேறு பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களின் உடலில் இரத்தத்தின் அளவை சரியான அளவில், ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
அதற்கு ஒருசிலவற்றை பின்பற்றி வர வேண்டும். இங்கு இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
போலிக் அமில உணவுகள் போலிக் அமிலம் தான் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. போலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், தானாகவே ஹீமோகுளோபின் அளவு குறையும். ஆகவே போலிக் அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களான பச்சை இலைக் காய்கறிகள், ஆட்டு ஈரல், முளைக்கட்டிய பயறுகள், கோதுமை, தானியங்கள், வாழைப்பழம், ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
பீட்ரூட் பீட்ரூட்டில் இரும்புச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலிக் ஆசிட் போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவை சீராக பராமரிக்கலாம்.
ஆப்பிள் ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் அதன் தோலில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மாதுளை மாதுளையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இப்பழம் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும்.
பேரிச்சம் பழம் தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர, உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலமும் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம். எப்படியென்றால், உடற்பயிற்சி செய்யும் போது உடல் முழுவதும் ஆக்ஸிஜன் அதிகம் தேவைப்படுவதால், உடல் தானாகவே ஹீமோகுளோபினை உற்பத்தி செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.