தேர்தல் நடத்தை விதி: புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து
புதுக்கோட்டை மாவட்டம் ஆயிரக்கணக்கான கிராமங்களையும், விவசாயிகளையும் உள்ளடக்கிய மாவட்டமாகும். உயர் கல்வியைப் பொறுத்தவரை பெரும்பாலான மாணவ, மாணவிகள் கிராமப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், பட்டம் பெறுபவர்களில் 90 சதவிகிதம் தங்களது வீட்டில் முதல் பட்டதாரியாக முதல் தலைமுறையாகப் பயில்பவர்களாகவும் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை, குடும்பச் சிரமங்களை பொருள்படுத்தாமல் திறமையுடன் பயின்று தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் பட்டம் பெறுவதென்பது அவரது வாழ்விலும், அவர்களது பெற்றோர்களின் கனவு நனவாகும் மிக முக்கியமான நாள் என்றால் அது மிகையில்லை. தங்களுடைய முயற்சிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகப் பார்க்கக்கூடிய பட்டத்தைப் பெறுவதற்கு உறு துணையாக இருந்த ஆசிரியர்களும், பெற்றோர்களும், நண்பர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கக்கூடிய விழாவாக பட்டமளிப்பு விழா கருதப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர்(தன்னாட்சி) கல்லூரியில் பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி நிர்வாகம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. அதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சொ. சுப்பையா பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து வந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரிக்கல்வி மண்டல இயக்குனரகத்திலிருந்து வந்த கடிதத்தில் தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச்-4 முதல் மே.21வரை) அமலில் உள்ளதால்,அரசுக் கல்லூரிகளில் வழக்கமாக கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா போன்ற விழாக்களை நடத்தத் திட்டமிட்டிருந்தால் அவற்றை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க வேண்டும். இந்த நடைமுறையை தவறாது பின்பற்ற வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத்தகவல் சனிக்கிழமை காலை வரை கல்லூரி மாணவிகளுக்கு தெரியவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கம் போல பட்டமளிப்பு விழாவில் அதற்கான உடையணிந்து பல நூறு பேரின் கரவொலிக்கிடையே துணை வேந்தர் கையால் பட்டம் பெறப் போகிறோம் என்கிற கனவுடன் வந்த மாணவிகளுக்கும், அதைப்பார்த்துப் பெருமைப்படுவதற்காக உடன் வந்திருந்த பெற்றோர்களுக்கும் தேர்தலைக் காரணம் காட்டி விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரியில் தகவல் தெரிய வந்ததும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து, கல்லூரியில் பட்டம் பெற வந்த சுமார் 800 -க்கும் மேல்பட்ட மாணவிகள் தத்தமது துறைப் பேராசிரியர்களிடமிருந்து பட்டங்களைப் பெற்றுச் சென்றனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கல்லூரியில் நடக்க வேண்டிய இது போன்ற முக்கிய நிகழ்வுகள் தடை செய்யப்படுவது வேதனை அளிப்பதாக மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவித்தனர்.