குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. தையல் தொழிலாளி. இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், நர்மதா, கோட்டீஸ்வரி என்ற மகள்களும், ராகவேந்திரா என்ற மகனும் உள்ளனர்.
கோட்டீஸ்வரி (வயது 11) இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9–ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கோட்டீஸ்வரிக்கு வலது கண்ணில் அடிபட்டுள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாக பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது, வகுப்பறையில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் நடத்தியபோது கண்ணாடி டம்ளரில் கெமிக்கல் கலந்த சோப்பு கலவை வைக்கப்பட்டிருந்தது.
அந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து அதிலிருந்து தெறித்த துளி கண்ணில் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவிக்கு கண்ணில் ஏற்பட்ட காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் வேலூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக மாணவிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவிக்கு பாதிக்கப்பட்ட வலது கண்ணில் அறுவை சிகிச்சைக்கு பின்னரே பார்வை குறித்து தெரிய வரும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், மாணவி கோட்டீஸ்வரியின் தந்தை பாலாஜி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் மாணவியின் கண் பாதிப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை.
உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் மைக்கேல் தாஸிடம் கேட்டதற்கு, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது என்றார். பள்ளியில் மாணவிக்கு நேர்ந்தது என்ன? பார்வை திறன் பாதித்தத காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.