புதன், 3 ஆகஸ்ட், 2022

அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை

 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 03 08 2022 முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது.

அரசு பேருந்துகளில் பார்சல் சேவையையும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் நீண்ட காலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இதர வருவாயை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் நாளை முதல் பயணிகள் சேவையுடன் பார்சல் மற்றும் கூரியர் சேவையையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நாளை முதல் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய 7 நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவையை தொடங்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் இந்த சேவையை பெறலாம் என தெரிவித்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் ஒவ்வொரு நகரங்களிலிருந்தும் சென்னைக்கு  பார்சல் சேவை வழங்குவதற்கு தனிதனியாக கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.

80 கிலோ வரையிலான பார்சலை திருச்சியிலிருந்து, சென்னைக்கு கொண்டு செல்ல 210 ரூபாய், மதுரையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல 300 ரூபாய், திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல  390 ரூபாய், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல 390 ரூபாய், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல 390 ரூபாய், கோவையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல 330 ரூபாய், ஓசூரிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல 210 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனுப்பும் பார்சல்கள் ஒரே நாளில் சென்றடையும் வகையில் துரித சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியார் வாகனங்களில் பார்சல் கொண்டு செல்ல அதிக செலவு ஆகும் நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் இந்த பார்சல் சேவை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்பதற்கு இது போன்ற இதர வருவாய்கள் உதவும் என்றும் கருத்து நிலவுகிறது.



source https://news7tamil.live/parcel-service-in-setc-buses.html