செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்நாடகாவில் ‌தொடரும் வன்முறை: பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு


கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் காயமடைந்தார்.
வன்முறையைத் தொடர்ந்து பெங்களூருவிலும், மைசூரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத்
தொடர்ந்து கர்நாடகாவில் பெங்களூரு -மைசூரு சாலை, விஜயநகர் பகுதி, மத்திய பெங்களூரு, கே ஆர் மார்கெடு, உல்சூர் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டதுடன் பல இடங்களில்
தீக்கிரையாக்கப்பட்டன. 25-க்கும் அதிகமான தமிழக சரக்கு லாரிகள்‌ தீவைத்து எரிக்கப்பட்டன. பெங்களூருவில் செயல்பட்டு வரும் தமிழக
நிறுவனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை
கலைக்க சுங்கதஹேட்டே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர். பெங்களூருவின் ஹெக்ஹனஹள்ளி
பகுதியில் காவல்துறை வாகனத்திற்கு தீவைக்க முயன்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர்
காயமடைந்தார். வன்முறை காரணமாக தமிழகம் கர்நாடகா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,
பெங்களூரு மாநகரில் பதற்றம் நீடிப்பதாகவும், ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை ஐஜி உமேஷ் குமார்
கூறியுள்ளார். மேலும், ராஜ்கோபால் நகர், காமாக்ஷிபால்யா, விஜய்நகர் உள்ளிட்ட ஏழு காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
source: new gen media

Related Posts: