அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! நமது தமிழகத்தில் வழமையாக ஈதுல் அள்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தன்று வெளி மாநிலங்களில் இருந்து ஒட்டகம் கொண்டு வரப்பட்டு உள்ஹியா (குர்பானி) கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் நான் பார்த்த வரையில் ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற ஒரு சரியான முறைமை விளங்காமல் தான் மக்கள் பெருமளவில் உள்ஹிய்யா கொடுக்கிறார்கள். ஒட்டகத்தோடு தொடர்புடைய மாநிலமாக நமது மாநிலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
எது எப்படியோ, இறைவனுக்காக நாம் நிறைவேற்ற இருக்கின்ற இந்த உள்ஹியா என்ற வணக்கம் இறைவன் கட்டளையிட்டதை போன்று தான் நிறைவேற்றப்பட வேண்டும்.
இங்கு உள்ஹியா கொடுப்பது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நாம் விளக்கப் போவதில்லை. அவைகள் பெரும்பாலான மக்களுக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகளவில் நினைவூட்டப்படாத “ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும்” என்ற சட்டத்தை மட்டும் நான் நினைவூட்ட ஆசைப் படுகிறேன்.
இது தொடர்பாக இறைவனே திருமறையில் தனி ஒரு பாடமாக மக்களுக்கு சொல்லித் தருகிறான். அந்த வசனம் இதோ:
“(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்க) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.”
திருக்குர்ஆன் (22:37).
திருக்குர்ஆன் (22:37).
மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம் ஒட்டகத்தை நிறுத்தி வைத்துத்தான் அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது.
ஆனால் நான் முன்பு சொன்னதைப் போன்று இந்த சட்டம் பலருக்கும் விளங்காமல், ஒட்டகத்தை தாறுமாறாக கட்டி, அதை தரையில் வீழ்த்தி, பல நபர்கள் சேர்ந்து அதனுடைய நீண்ட கழுத்தை முறுக்கி பிடித்துக்கொண்டு அல்லது கால்களால் அழுத்திக்கொண்டு அறுக்கின்றனர்.
இப்படித்தான் அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்லிவிட்டான் என்றால், அதற்கு மாற்றமாக ஒட்டகத்தை நாம் எவ்வாறு அறுத்தாலும் அது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலையை நமக்கு உண்டாக்கி விடும்.
அதுமட்டுமல்லாமல் நிறுத்தி வைத்துத்தான் ஒட்டகத்தை அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்கிறான் என்றால் அதில் காரணம் இல்லாமல் இறைவன் சொல்ல மாட்டான். இறைவன் சொன்ன முறைமைக்கு மாற்றமாக ஒட்டகமும் செயல்படாது, நாமும் அதற்கு மாற்றமாக செயல்படவும் கூடாது.
இறைவன் சொன்ன அடிப்படையில் ஒட்டகத்தை அறுப்பது தான் அந்த ஒட்டகத்திற்கு அமைதியளிப்பதாகும். மாறாக கட்டி வைத்து தாறுமாறாக மண்ணில் புரட்டி அறுப்பதென்பது நிச்சயமாக அந்த ஒட்டகத்திற்கு நோவினை ஏற்படுத்துவதாகும் என்பதை இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் நமக்காகவே இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்துள்ளான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்காக நாம் இது போன்ற பிராணிகளை எப்படி வேண்டுமானாலும் வதை செய்து சாப்பிடலாம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது.
இன்னும் சில நொடிகளில் இறந்து விடத்தானே போகிறது, இதனிடம் இனி தன்மையாக நடந்து என்ன நடக்க போகிறது என்ற எண்ணத்தில் ஆடு மாடுளை அறுக்கும் நபர்கள், மிகவும் கொடூரத் தன்மையோடு அந்த உயிரினங்களிடம் நடந்து கொள்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். இது தவாறான அணுகுமுறை ஆகும்.
உண்மையில் சொல்வதாக இருந்தால் நாம் அறுத்து சாப்பிடும் பிராணிகளை அல்லாஹ் தான் நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். பிராணிகளை அறுத்து சாப்பிடும் மனிதனை விட, பல மடங்கு பலத்தால் உயர்ந்த ஆடும் மாடும் அந்த மனிதனுக்கு பயந்து பணிகிறது என்றால் இதற்கு காரணம் இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
பிராணிகளுக்கு அமைதியளிக்கும் வகையில் இலகுவாக அவைகளை கையாண்டு அறுத்து சாப்பிட வேண்டும் என்ற வரையறையை இஸ்லாம் நமக்கு விதித்துள்ளது.
உங்களில் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (விரைவாக அறுப்பதன் மூலம்) தனது பலிப்பிராணிக்கு நிம்மதியை கொடுக்கட்டும்!
(முஸ்லிம், அபூதாவூத் 2817, திர்மிதி 1409)
உங்களில் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (விரைவாக அறுப்பதன் மூலம்) தனது பலிப்பிராணிக்கு நிம்மதியை கொடுக்கட்டும்!
(முஸ்லிம், அபூதாவூத் 2817, திர்மிதி 1409)
ஆகவே இறைவனும் இறைத்தூதரும் பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்களோ, அந்த அடிப்படையில் பிராணிகளை அறுத்து இறைவன் கடமையாக்கிய உள்ஹியா என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுவோமாக! இறைவன் அதற்கு உதவுவானாக!
குறிப்பு: ஒட்டகம் அறுக்க நாடும் நபர்கள் ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும். மற்ற உயிரினங்களுக்கு இவ்வாறுதான் அறுக்க வேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை. ஆகவே நாம் இயல்பாக ஆடுகளையும் மாடுகளையும் எவ்வாறு படுக்க வைத்து அறுப்போமோ அவ்வாறே அறுக்கலாம். அறுப்பதற்கு முன்பாக கழுத்து முறிந்து போகும் அளவிற்கு வதை செய்து அறுப்பதை தவிர்த்து தன்மையான முறையில் அறுக்கவும்.