ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஐஐடி-களில் மாணவிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு! April 16, 2017

நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடிகளில் சமீப ஆண்டுகளில் மாணவிகளின் சேர்க்கை வெகுவாக சரிந்தது. இதையடுத்து, இதுகுறித்து ஆராய்ந்து உரிய தீர்வு காண, பேராசிரியர் திமோதி கோன்சேவ்ஸ் தலைமையில், கடந்தாண்டு தனிக்குழு நியமிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மொத்த மாணவர் சேர்க்கையில், மாணவிகளுக்கு தனியே 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இக்குழு, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான கூட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான கூட்டு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, அந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து 2018  கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் மாணவிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. புதிய இடஒதுக்கீட்டின்படி, மாணவிகளுக்கான சேர்க்கை இடம் காலியானால், அந்த இடம் மாணவிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Posts: