27 11 2021
Tamilnadu CM Stalin And Governor R.N.Ravi Meet : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு தொடர்பாக மசோதாவை உடனடியாக குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் நேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதை தடுக்கும் முயற்சியாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு சார்பில் தமிழக சட்டபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குடியரசு தலைவரிடம், ஒப்படைக்க வேண்டி தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என.ரவியை சந்தித்து பேசியுள்ளார். சில நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், கடந்த செப்டம்பர் 13-ந் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு, 2 மாதங்களுக்கு மேலாகியும் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் இந்த நீட் விலக்கு மசோதாவை விரைவில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிசை முதல்வர் வற்புறுத்தியுள்ளார்.
மேலும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்தவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் உயர் அதிகாரிகள் சிலர் உடனிருந்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-meet-governor-rn-ravi-in-rajbhavan-375196/