ஞாயிறு, 28 நவம்பர், 2021

புதிய வகை கொரோனா; தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமனம்

 28 11 2021 தென்னாப்பிரிக்காவில் புதிய கோவிட்-19 வைரஸ் வகையான ‘ஓமிக்ரான்’ கண்டறியப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் நிலைமையை நேரில் கண்காணிக்க நான்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை நியமித்துள்ளது என்று மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த அதிகாரிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், பெல்ஜியம், ஹாங்காங் (சீனா) ஆகிய ஐந்து நாடுகளில் Omicron வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகமும் சர்வதேச விமான நிலையங்களில் (மாநிலத்தின்) முழு அளவிலான தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது,” என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக, நான்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் இந்த விமான நிலையங்களில் ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளனர், என்று அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளுடன், சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை பரிசோதனை நடைமுறைகளை ஆய்வு செய்தார்.

“சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை 99 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அவர்களின் தடுப்பூசி அறிக்கைகளும் இங்கு சரிபார்ப்பு செய்யப்படுகிறது”, என்று அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அக்டோபர் 21 முதல் இன்றுவரை 55,090 பேர் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என்று அமைச்சர் கூறினார்.

“தடுப்பூசி போடுவது” மற்றும் “முகக்கவசம் அணிவது” ஆகியவை கொரோனாவுக்கு எதிரான ஆயுதங்கள் என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், தமிழகத்தில் 78 லட்சம் பேர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறவில்லை என்று கூறினார்.

“தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் 281 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், ஐந்து பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் வைரஸ் இன்னும் பரவி வருவதைக் காட்டுகின்றன,” என்று அமைச்சர் கூறினார்.

50,000 முகாம்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்திடம் 1.12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன, இன்றும் கூட, 12 லட்சம் கூடுதல் மருந்துகளை அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்தது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்”, என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-international-airport-covid-19-variant-screening-375370/