ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பிறந்தது புதிய நிதியாண்டு: அமலாகும் மாற்றங்கள்

20‌17-18‌ புதிய நிதியாண்டு இன்று தொடங்க உள்ள நிலையில் இன்றிலிருந்து பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஃப் மற்றும் சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டித் தொகை இன்று முதல் 0.1% குறைக்கப்படுகிறது. புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற நடைமுறையும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகையும் 41 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டரை முதல் ஐந்து லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விகிதம் 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என்ற‌ ‌பட்ஜெட் அறிவிப்பு நடப்பு நிதியாண்டில் அமலுக்கு வருகிறது.
முன் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ரயில் புறப்படும் போதும் இருக்கை உறுதியாகாவிட்டால் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் விகல்ப் என்ற திட்டமும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 20 நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள் உட்பட நாடெங்கும் 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக் கட்டணம் 10 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தவிர BS 4 தர விதிமுறைகள் கொண்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை மற்றும் பதிவு செய்யப்படும் என்ற விதியும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாரத ‌ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்த பட்சத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி மாநகர கிளைகளில் ஒரு மாதத்தில் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கணக்கில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். நகரப்பகுதி கிளைகளில் 3 ஆயிரம் ரூபாய்க்கு கீழும் சிறு நகரக் கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு கீழும் கிராமப்புறக் கிளைகளில் ஆயிரம் ரூபாய்க்கு கீழும் கணக்கில் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சேமிப்புக்கணக்கில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே ரொக்கப்பணத்தை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மேல் டெபாசிட் செய்ய ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 10 ரூபாய் கட்டணமும் மற்ற ஏடிஎம்களில‌ 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால், 20 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.