சனி, 9 செப்டம்பர், 2017

நீட் தேர்வுக்கு எதிராக 13ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்பாட்டம்! September 09, 2017


நீட் தேர்வுக்கு எதிராக 13ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்த போதும், திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன், மேடையில் வைக்கப்பட்டிருந்த மாணவி அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 
 
கூட்டத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

தமிழர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தற்போது வெளி மாநில மாணவர்கள் படித்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேதனை தெரிவித்தார். 

இளைஞர்களின் பேரெழுச்சியால் தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைத்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அதே போல் ஒரு போராட்டத்திற்கு இளைஞர்கள் மீண்டும் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். 

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் என்பது ஏழை எளிய மக்களுக்கு நீதி வழங்கக் கூடிய மன்றம் அல்ல என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை புதைக்குழிக்குள் அனுப்பும் வரை ஓய மாட்டோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார். 

கல்வியை மாநில அரசுகளின் பட்டியலுக்கு கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் இணைந்து பாடுபட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் வலியுறுத்தினார்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என பொதுக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

Related Posts: